கோவையைச் சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய மினி சாட்டிலைட் போன்ற வளிமண்டல ஆய்வுக் கருவி, ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

அக்டோபர் 30-ம் தேதி காலை 9 மணிக்கு, துடியலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலிருந்து ஏவப்பட்ட இந்தக் கருவி, சுமார் 3 மணி நேரம் பயணித்து, அதிகபட்சமாக 35 கிலோமீட்டர் உயரத்தை எட்டியது.
சாதாரண வணிக விமானங்கள் பறக்கும் உயரத்தைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான உயரம் இது!

அங்கே என்ன நடக்கிறது என்பதை ஆராயும் வகையில், வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கணக்கிடும் சென்சார்கள், காற்றில் உள்ள நுண்துகள்களைச் சேகரிக்கும் கருவி எனப் பல தொழில்நுட்ப வசதிகள் இதில் பொருத்தப்பட்டிருந்தன.
மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் குளிரையும் தாங்கி, சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கிய ஆய்வுக் கருவியைத் தேடல் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

குறிப்பாக, 55 அரசுப் பள்ளி மாணவர்களின் பங்களிப்பில் உருவான இந்த முயற்சி, அவர்களுக்குப் புத்தகத்தில் படிக்கும் அறிவியலை நேரடி ஆராய்ச்சியாக மாற்றியிருக்கிறது.
சின்ன வயதில் விண்ணைத் தொட்ட இந்த மாணவர்களின் கனவு, நாளை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரங்களைத் தொடுமா?