தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில், நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு முறையை E-டெண்டர் (மின்னணு ஒப்பந்தப்புள்ளி) மூலம் தனியார் நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சோழவந்தான் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பத்திர எழுத்தர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் உள்ளிட்டோர் ஒரு நாள் அடையாளமாகக் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து பணியாற்றும் உதவியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு முறையை E-டெண்டர் மூலம் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள், உதவியாளர்கள், ரியல் எஸ்டேட் முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து பணியாற்றினர்.





