கோவை, மாநகரப் பகுதியில் கடந்த 3 நாட்களாகக் கொட்டித் தீர்த்த கன மழை காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், குனியமுத்தூர் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காளவாய் பகுதியில் மழைநீருடன் ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டு அதிக அளவில் நுரை பொங்கி வருவது அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, குனியமுத்தூர், ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் பாதையில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்து செல்கிறது. இந்நிலையில், அப்பகுதியில் இயங்கி வரும் சில தொழிற்சாலைகள் அல்லது சட்டவிரோத நிறுவனங்கள் மழைநீரைப் பயன்படுத்தித் தங்களது ரசாயனக் கழிவுகளை இதில் கலந்து விட்டதாகப் புகார் எழுந்து உள்ளது.

இதன் காரணமாக, மழைநீரில் அளவுக்கு அதிகமான அளவில் வெண்மையான நுரை பெருக்கெடுத்து, அப்பகுதி முழுவதையும் பனிப்பொழிவு போல மூடியபடி காட்சி அளிக்கிறது.
மழைநீரின் வேகத்தாலும் பலத்த காற்றினாலும் இந்த நுரைத் திரள்கள் காற்றில் மிதந்து, வானில் பறந்து அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் பரவி வருகின்றன.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் சுவாசம் சார்ந்த நோய்கள், சருமப் பாதிப்புகள் (Skin allergy) மற்றும் கண்கள் எரிச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவார்களோ என்ற கடுமையான பீதியில் உறைந்து உள்ளனர்.
ரசாயனம் கலந்த கழிவுநீர் நிலத்தடி நீரில் கலந்தால் குடிநீரும் நஞ்சாகும் ஆபத்து நிலவுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் (TNPCB) மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மழைநீரில் ரசாயனக் கழிவுகளைக் கலந்துவிட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நுரை பரவுவதைத் தடுத்துப் பகுதியைச் சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




