மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறாகப் பேசி, சமூகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற சமூக விரோதிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் M. சோலைக்கண்ணன் அவர்கள் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆடு, கோழிகளைப் பலியிடுவதையும், ‘சிக்கந்தர் மலை’ எனப் பெயர் மாற்றம் செய்து மலையை அபகரிக்க முயல்வதையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அது தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், ‘behar-jerrg’ மற்றும் ‘S.jerma Benjar’ ஆகிய முகநூல் (Facebook) கணக்குகளிலிருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், அடையாளம் தெரிந்த நபர்கள் பொதுமக்களிடையே மதக் கலவரத்தையும் பதற்றத்தையும் தூண்டும் வகையில் பேசியுள்ளனர்.
அந்த வீடியோவில், திருப்பரங்குன்றம் மலையை ‘சிக்கந்தர் மலை’ என்றும், அங்குள்ள முருகன் கோயிலை இடித்துத் தள்ளுவதாகவும், அந்த மலை முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் கடுமையான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கார்த்திகை தீபம் ஏற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதி அரசர் திரு. G.R. சுவாமிநாதன் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையிலும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கத்திலும் மிகவும் தரக்குறைவாகவும் ஏளனமாகவும் பேசியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் சூழலில், முருகன் கோயிலை இடிப்போம் எனத் திட்டமிட்டு மதவெறியைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க நினைக்கும் இந்த நபர்களுக்குப் பின்னால், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காவல் ஆணையரிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்:
- மாண்புமிகு நீதி அரசர் திரு. G.R. சுவாமிநாதன் அவர்களையும் நீதித்துறையையும் அவமதித்து, இந்து-முஸ்லிம் இடையே மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற சமூக விரோதிகள் மீது வழக்குப் பதிவு செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் (NSA) உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அங்கு காவல்துறை பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.
- சமூக வலைதளங்களில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பரவி வரும் அந்த வீடியோவை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், உலகெங்கும் வாழும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியவர்களைக் கண்டித்தும், நீதித்துறையின் மாண்பைக் காக்கவும் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுடன் சம்மந்தப்பட்ட வீடியோ ஆதாரம் மற்றும் முகநூல் கணக்கு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.





