கடந்த மூன்று ஆண்டுகளில் விபத்து, தற்கொலை, கொலை ஆகியவை காரணமாக இறந்து போன 5 ஆயிரம் உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்ப்பிப்பதுடன், ஆதரவற்ற, இறுதி காரியங்கள் செய்ய வசதி இல்லாத 400க்கும் மேற்பட்ட உடல்களுக்கு தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்யும் சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறார் 35 வயதான மதுரையைச் சேர்ந்த இளைஞர். அவர் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

விபத்து, தற்கொலை, கொலை எனப் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து, ஆதரவற்ற நிலையில் கிடக்கும் மனிதர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது முதல், உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில் இறுதிச்சடங்குகளைத் தனது சொந்தச் செலவில் தானே நல்லடக்கம் செய்வது வரை, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தன்னலமற்ற சேவையை மேற்கொண்டு வருகிறார் மதுரையைச் சேர்ந்த 35 வயது இளைஞர் பாண்டி. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகளையும் செய்துள்ள அவரது மனிதநேயப் பணி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சிதறிக் கிடந்த உடல் உறுப்புகளையும் தேடிச் சேகரிக்கும் மனிதநேயம்! சில நாட்களுக்கு முன்பு மதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் சிதறிக் கிடந்தது. தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற பாண்டி, ஆங்காங்கே சிதறிக் கிடந்த உடல் உறுப்புகளை ஒன்றுவிடாமல் சேகரித்தார். பின்னர் அவற்றை வெள்ளைத் துணியில் வைத்து, தனக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் உடற்கூறாய்வுப் பிரிவுக்குக் கொண்டு சென்றார். இந்தக் காட்சியைப் பார்த்த அங்கிருந்த காவலர் ஒருவர், எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல், எந்த நேரத்தில் அழைத்தாலும் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் பாண்டியின் சேவை, காவல்துறையினரின் பணியை எளிதாக்குவதாகப் பாராட்டினார். இப்படித்தான் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்து கிடக்கும் ஆதரவற்றவர்களின் உடல்களை மீட்டு, அப் பிரேதங்களுக்கு உரிய மரியாயதையை செய்து வருகிறார் பாண்டி.

முனிச்சாலை வாடகை வீடு… இரண்டு பழைய ஆம்புலன்ஸ்கள்! மதுரை முனிச்சாலைப் பகுதியில் வசிக்கும் பாண்டிக்கு, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மிகச் சிறிய வாடகை வீடும், மிகவும் பழைய இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுமே அவரது வாழ்க்கையின் அடிப்படைச் சொத்துகள். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், முதலில் டிராவல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார். சுமார் ஏழு ஆண்டுகள் வேறொரு நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாகச் சொந்தமாக ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறார்.
பணம் இல்லாவிட்டாலும் பணி நிற்பதில்லை! பாண்டியின் நண்பரும், அவருடன் இணைந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றுபவருமான கருப்பசாமி, அவரது சேவையை நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார். “நான் அவருடன் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறேன். பல நேரங்களில் கையில் பணமே இருக்காது. ஆனால், ஆதரவற்ற ஒருவரின் உடல் கிடப்பதாகத் தகவல் வந்துவிட்டால், எப்படியாவது பணத்தைத் திரட்டி அந்த இடத்துக்குச் சென்றுவிடுவார். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வருவார். உறவினர்கள் யாரும் வரவில்லை என்றால், காவல்துறையின் அனுமதியுடன் உடலை மயானத்துக்குக் கொண்டு சென்று, தனது சொந்தச் செலவில் இறுதிச்சடங்குகளைச் செய்து நல்லடக்கம் செய்துவிட்டுத்தான் திரும்புவார்” என்கிறார் கருப்பசாமி. ஆதரவற்ற ஒருவரின் உடலை முறையாக நல்லடக்கம் செய்ய குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை செலவாகிறது. ஆம்புலன்ஸ் சேவையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே பாண்டி இந்தச் செலவுகளைச் சமாளிக்கிறார். சில நாள்களில் மூன்று அல்லது நான்கு ஆதரவற்ற உடல்களைக்கூட அடக்கம் செய்ய வேண்டியிருக்கும். வருமானம் போதாத சூழலிலும் இந்தச் சேவையை அவர் கைவிடுவதில்லை என்பதுதான் அவரது தனித்தன்மை.

குழந்தையாக இருந்தால் தனது பிள்ளை… முதியவராக இருந்தால் தனது பெற்றோர்! பாண்டி தனது சேவையை வெறும் உடல்களை எடுத்துச் செல்லும் பணியாகப் பார்ப்பதில்லை. உயிரிழந்த ஒவ்வொருவரையும் தனது குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இதுவரை சுமார் 5,000 உடல்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கிறேன். மாதத்துக்கு 10 முதல் 15 ஆதரவற்ற உடல்களை எனது சொந்தச் செலவில் நல்லடக்கம் செய்து வருகிறேன். இதற்காக இதுவரை யாரிடமும் பணமோ, பொருளோ வாங்கியதில்லை. உறவினர்கள் இருந்தால் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆதரவற்றவர்களாக இருந்தால் அந்தச் செலவு என்னுடையதுதான். இத்தகைய உடல்களை அடக்கம் செய்ய ஆள்கள் இல்லாததால், நானே முன்வந்து இந்தச் சேவையைச் செய்து வருகிறேன். பணம், லாபம் ஆகியவற்றைத் தாண்டியதுதான் இந்தச் சேவை. இறந்தவர்களின் ஆன்மா என்னையும் என் குடும்பத்தையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை பலருக்கும் இறுதிச்சடங்கு செய்திருக்கிறேன். குழந்தையாக இருந்தால் எனது பிள்ளையாகவும், வயதானவர்களாக இருந்தால் எனது பெற்றோராகவும் நினைத்துத்தான் அவர்களை அணுகுகிறேன்” என்கிறார்.
உறவினர்களின் விமர்சனம்… மனதில் வலியை ஏற்படுத்தும் வேதனை! சமூகத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதையே சிலர் இழிவாகப் பார்க்கும் நிலை உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து வரும் பாண்டிக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. தான் மேற்கொண்டு வரும் பணியைத் தனது உறவினர்களே இழிவாகப் பார்ப்பதாகக் கூறும் அவர், அதனால் மனவேதனை அடைவதாகத் தெரிவிக்கிறார். ஆனால், பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது பணியைத் தொடர்ந்து வருகிறார்.
எந்நேரமும் அணைக்கப்படாத செல்பேசி! பாண்டியின் செல்பேசி ஒருபோதும் அணைத்து வைக்கப்படுவதில்லை. இரவு, பகல் என எந்த நேரத்தில் அழைப்பு வந்தாலும் சம்பவ இடத்துக்குச் செல்லத் தயாராக இருக்கிறார். விபத்து அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்து கிடக்கும் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது, உடற்கூறாய்வு முடிந்த பின்னர் உறவினர்கள் இல்லாத உடல்களை உரிய அனுமதியுடன் மயானத்துக்குக் கொண்டு செல்வது என அவரது பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உறவினர்கள் யாரும் உரிமை கோராத உடல்களுக்கு, சட்ட நடைமுறைகள் மற்றும் காவல்துறையின் அனுமதியைப் பின்பற்றி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணியில் காவல்துறையினர் அளித்து வரும் ஒத்துழைப்பையும் பாண்டி நன்றியுடன் நினைவுகூர்கிறார். சில நேரங்களில் ஓட்டுநர் இல்லாத சூழலிலும் தானே ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று தனது பணியைத் தொடர்வதாகக் கூறுகிறார்.

பசியாற்றுவதைப் போலவே ஆதரவற்ற உடலுக்கு செய்யும் மரியாதையும்! மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறை அருகே தேநீர்க்கடை நடத்தி வரும் பாக்கியம், பாண்டியின் சேவையைப் பாராட்டுகிறார். “மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் கிடக்கும் உடல்களைப் பாண்டிதான் மீட்டுக் கொண்டு வருவார். சில நேரங்களில் இரண்டு, மூன்று நாள்களாகக் கிடந்து அழுகிய நிலையில் இருக்கும் உடல்களைக்கூடத் தயங்காமல் எடுத்துச் சென்று மருத்துவமனையில் ஒப்படைப்பார். பின்னர் மயானத்துக்குக் கொண்டு சென்று நல்லடக்கம் செய்வார். இந்தக் காலத்திலும் எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் இப்படியொரு சேவையைச் செய்வது பெரிய விஷயம். பசிக்கிறது என்று ஒருவர் கேட்டால் அவருக்கு உணவு வாங்கித் தருவது எப்படி இயல்பான மனிதநேயமோ, அதுபோலத்தான் பாண்டி செய்து வரும் இந்தச் சேவையும்” என்கிறார் அவர்.
ஒரு மனிதனின் இறுதி மரியாதைக்காகத் தொடரும் பயணம்! வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய வயதில், குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் தனக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஆதரவற்ற பிரேதங்களின் இறுதி மரியாதைக்காகத் தனது நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவிட்டு வருகிறார் பாண்டி.
அவரது பணி, ஆதரவற்ற உடல்களை எடுத்துச் செல்வதோடு முடிந்துவிடுவதில்லை. இறந்த பின்னரும் ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை மனிதநேயத்தை நினைவூட்டுகிறது. இந்தச் சேவைக்கு யாரேனும் உதவ முன்வந்தால் ஏற்றுக்கொள்வதாகக் கூறும் பாண்டி, உதவி கிடைக்காவிட்டாலும் தனது பணியைத் தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். உயிருடன் இருக்கும்போது உறவுகள் தேவைப்படுகின்றன; இறந்த பின்னரும் மனிதநேயமும் மரியாதையும் தேவைப்படுகின்றன என்பதைத் தனது அன்றாடச் செயல்களால் உணர்த்தி வருகிறார்




