திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கலிக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையான நிலையில், இன்று தேவையின் காரணமாக அதிகபட்சமாக ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகி வருகிறது.
இதேபோல் ரோஸ் கடந்த சில மாதங்களாக ரூபாய் 100க்கும் கீழே விற்பனையானது. தற்போது அதிகபட்சமாக விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.350-க்கு விற்பனையாகிறது.
ஆயுத பூஜைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செவ்வந்திப் பூ ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையிலும்,
சம்பங்கி ஒரு கிலோ ரூ.600 வரையிலும், அரளி ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், செண்டுமல்லி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ 130 வரையிலும், கோழிக்கொண்டைப் பூ ரூ.100 முதல் ரூ.120 வரையிலும்,
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகத் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கனகாம்பரம் பூ ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனையாகிறது.

ஆயுத பூஜை வழிபாட்டிற்காகச் செவ்வந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட மாலை கட்டும் பூக்களையே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
பூக்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



