மதுரை மாநகரில் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓபலா படித்துறை பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு வந்து, அருகில் உள்ள சாலையில் 3 வயது குழந்தை ஒன்று கேட்பாராரின்றி தனியாக நடந்து செல்வதாக தகவல் தெரிவித்தார்.

உடனே உஷாரான காவல்துறையினர், அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று ரோட்டில் தனியாக அழுதுகொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையிடம் பெயர் மற்றும் முகவரியைக் கேட்க முயன்றபோது, அக்குழந்தைக்கு தமிழ் மொழி தெரியவில்லை என்பதும், இந்தி மொழி பேசும் குழந்தை என்பதும் தெரியவந்தது. இருப்பினும், மிகுந்த கனிவோடு விசாரித்து குழந்தையின் பெயரைக் கண்டறிந்த காவல்துறையினர், உடனடியாக அக்குழந்தைக்கு பசி தீர்க்க தேவையான உணவையும் வழங்கி பாதுகாப்பாக கவனித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, குழந்தை காணாமல் போனது குறித்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மதிச்சியம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் தனது குழந்தையைத் தேடி தந்தை ஒருவர் பதறிக்கொண்டு அலைவது குறித்த தகவல் தல்லாகுளம் காவலர்களுக்கு கிடைத்தது.
உடனே அந்த குழந்தையை மதிச்சியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தல்லாகுளம் காவல்துறையினர், அங்கு தேடிக்கொண்டிருந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் தான் அக்குழந்தையின் உண்மையான தந்தை என்பதை முழுமையாக உறுதி செய்துகொண்டனர்.

இதனையடுத்து, இனிமேல் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என உரிய அறிவுரைகளும் எச்சரிக்கையும் வழங்கி, மீட்கப்பட்ட மூன்று வயது குழந்தையை மகிழ்ச்சியுடன் அவரது தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
ரோட்டில் தவித்த வடமாநிலக் குழந்தையை மீட்டு, துரிதமாகச் செயல்பட்டு பெற்றோருடன் சேர்த்து வைத்த தல்லாகுளம் மற்றும் மதிச்சியம் காவல் நிலையக் காவலர்களின் இந்தச் செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



