தேனியில் நிர்வாக பிரச்னையால் தனியார் பள்ளி திறக்கப்படாததை கண்டித்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவைகத்தை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கல்வித்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயிலும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வகிப்பது தொடர்பாக பழைய, புதிய நிர்வாகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில்,

பள்ளியை முதன் முதலாக ஆரம்பித்த நிர்வாகத்தினர் நிர்வகிக்க தமிழ்நாடு கல்வித் துறை இயக்குநரகம் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி தற்போது தேனி மாவட்ட கல்வி அலுவலர் ( தனியார் பள்ளிகள்) அலுவலகத்தை முற்றுகையிட்டு பெற்றோர், ஆசிரியர்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் கல்வித் துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத அளவில் இந்த கல்வி ஆண்டு முடியும் வரை பள்ளியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகமே புதிய கட்டிடம் தேர்வு செய்து பள்ளியை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சுமுக முடிவால் போராட்டம் கைவிடப்பட்டது.



