“தேனியில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குறிப்பாக, நதிநீர் உரிமைகள் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினைகளில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவிற்குச் சென்றது போல, முதலமைச்சர் விஜய் கேரளாவிற்கும் சென்று முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்டுத் தர வேண்டும். மேலும், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று கரு.நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது மின்வெட்டுப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது மிகப்பெரிய தவறு. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. இதற்கு மாற்றாக காற்றாலைகளை அமைத்து மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்த பின்புதான் தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது.
தி.மு.க.-வை குறை கூறுவதை விட்டுவிட்டு, மக்களின் விலைவாசி உயர்வைைக் கட்டுப்படுத்தத் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து தேனி செய்தியாளர் சந்திப்பில் கரு.நாகராஜன் எழுப்பிய கேள்விகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.



