தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் (தொமுச பேரவை) சார்பாக, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் மாபெரும் பட்டினி போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் மு. இருளாண்டி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வரும் நவம்பர் 3-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கம் அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
முக்கிய 11 அம்ச கோரிக்கைகள்:

- அரசே ஏற்று நடத்த வேண்டும்: PPP (பொது-தனியார் பங்களிப்பு) முறையைக் கைவிட்டு, 108 சேவையைத் தமிழ்நாடு அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும்; 7,000 தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- தீர்ப்பாயத் தீர்ப்பு அமலாக்கம்: தொழிலாளர் தீர்ப்பாயத்தின்படி 2022–23 ஆம் ஆண்டிற்கான 25% ஊதிய உயர்வு, 8.33% போனஸ், வட்டி மற்றும் வழக்குச் செலவுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
- 8 மணி நேர வேலை: மூன்று ஷிப்ட் முறையில் ஊதியக் குறைப்பின்றி 8 மணி நேர வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும்.
- ஊதிய உயர்வு: தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 2026-ஆம் ஆண்டிற்கு 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
- பெண் தொழிலாளர் பாதுகாப்பு: பெண் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் 1 ஆண்டு மகப்பேறு விடுப்பு மற்றும் ₹5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.
- உயிரிழப்பு காப்பீடு: பணி நேர உயிரிழப்பிற்கு ₹50 லட்சமும், பணி அல்லாத நேர உயிரிழப்பிற்கு ₹30 லட்சமும் காப்பீட்டுத் தொகையாக உயர்த்த வேண்டும்.
- பயோமெட்ரிக் வருகைப் பதிவு: Face Biometrics முறையில் வருகை மற்றும் பணி நிறைவு நேரத்தைப் பதிவு செய்து, சம்பளப் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
- மாத முதல் நாளில் சம்பளம்: தவணை முறையில் சம்பளம் வழங்குவதைத் தடுத்து, மாதத்தின் முதல் வேலை நாளிலேயே முழுச் சம்பளமும், 5-ஆம் தேதிக்குள் சம்பளச் சீட்டும் (Salary Slip) வழங்க வேண்டும்.
- பணிப் பாதுகாப்பு: Fixed Term Employment முறையைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
- விடுப்புப் பலன்கள்: 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 10 நாட்கள் Paid Leave மற்றும் பண்டிகை நாட்களில் இரட்டிப்புச் சம்பளம் ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும்.
- நியாயமான பணிமாற்றம்: பழிவாங்கும் நோக்கில் 400 கி.மீ. தொலைவிற்குப் பணிமாற்றம் செய்வதைத் தவிர்த்து, எழுத்துப்பூர்வ உத்தரவுடன் அருகிலுள்ள மாவட்டங்களிலேயே பணி வழங்க வேண்டும்..




