• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக பணியாளர்கள் புகார்..,

ByKalamegam Viswanathan

Oct 14, 2026

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள், தங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.
​

இந்த ஊராட்சியில் பணிபுரியும் வயதான மற்றும் ஏழை எளிய பெண்கள் தொடர்ந்து வேலை செய்து வந்தாலும், அதற்கான ஊதியம் பல வாரங்களாக நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர். ஊதிய கணக்கில் இரண்டு வாரங்கள் மட்டுமே ஏறியிருப்பதாகவும், ஆனால் கடந்த மூன்று மாதங்களாக தங்களுக்கான முழுமையான சம்பளம் வரவில்லை என்றும் பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சம்பளம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடும் வறட்சி காரணமாக வைகையின் நீர்மட்டம் குறைந்துள்ள காரணத்தால் பெரியார் கால்வாயில் நீர்வரத்து இன்றி விவசாய வேலைகளும் இல்லாத நிலையில் கிராமங்களில் வேலைவாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில், பசியையும் வறுமையையும் போக்க இந்த 100 நாள் வேலைக்கு சென்றால், அங்கும் தங்களுக்கு உரிய காலத்தில் கூலி கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக அவர்கள் புலம்புகின்றனர்.

மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவிதமான உரிய தீர்வும் எட்டப்படவில்லை என்றும், வயதான காலத்தில் தங்களால் வேறு வேலைகளுக்கு செல்ல முடியாத நிலையில் இந்த 100 நாள் வேலை ஊதியத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற ஏழை எளிய தொழிலாளர்களின் துயரங்கள் உடனடியாக துடைத்தெறியப்படும் என்றும், 100 நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையில் உள்ள ஊதியங்கள் எந்தவிதமான தாமதமும் இன்றி வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்த நிலையில் மூன்று மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
​

எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சம்பளம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.