• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி….

BySeenu

Oct 13, 2026

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மஹாலில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சேலம் கைத்தறி நெசவாளர் சேவை மையம் சார்பில், ‘தி கிராண்ட் இந்தியன் தசரா தீபாவளி கைத்தறி மகோத்சவம்’ சிறப்பு கண்காட்சி இன்று தொடங்கியது.

வரும் 22ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், போச்சம்பள்ளி புடவைகள், பெங்கால் காட்டன், பட்டோலா, பைத்தானி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைத்தறி ரகங்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியின் தொடக்க விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். கைத்தறித் துறையில் சிறப்பாகப் பங்களித்த நெசவாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்களின் கீழ் கைத்தறி நெசவு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய அமைச்சர் விஜய பாலாஜி, கடந்த காலங்களில் நலிவடைந்த நிலையில் இருந்த கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தரமான வேட்டி, சேலைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறினார். மேட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்கக் கோரிக்கை வந்துள்ள நிலையில், அதற்கான இடத்தை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இந்தக் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.