விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளர் தம்பதி பாண்டியராஜ்- உமா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். 2வது மகள் மாலதி அரசு பள்ளியில் பயின்று தற்போது நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். இவரது சகோதரி லக்சிதா விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

மாணவி மாலதி ஓவியப் போட்டிகளில் பல்வேறு சாதனைகளும், கோலப் போட்டிகளில் லக்சிதா பல்வேறு சாதனைகளையும் படைத்து வரும் நிலையில், சகோதரிகள் இருவருக்கும் துப்பாக்கிகளைக் கையாள்வதில் திடீர் ஆர்வம் ஏற்பட்டு தங்களது உறவினர் ஒருவரின் தோட்டத்தில் தந்தையின் உதவியோடு தாங்களாகவே பயிற்சி பெற்ற நிலையில், தாயில் பட்டி ஜேசிஐ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கியின் மூலம் தன்னுடைய பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி மாணவியான மாலதியை மட்டும் சிவகாசி தனியார் பொறியியல் கல்லூரி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பாண்டியராஜ் பயிற்சிக்காக சேர்த்துள்ளார்.

இதற்கிடையே கடந்த மாதம் தென்காசியில் நடந்த மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்ற மாலதி, போட்டியின் போது அதி நவீன துப்பாக்கிகளை பயன்படுத்திய போட்டியாளர்களுக்கு மத்தியில், தன்னிடமிருந்த தரம் குறைந்த துப்பாக்கியைக் கையாண்டு 10 மீட்டர் தூர “ஏர் ரைபிள் பீப் சைட்” பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்று, வெண்கலப் பதக்கத்தை வென்றதோடு, வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்கத் தகுதியும் பெற்றுள்ளார்.

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு தனக்கெதிரான போட்டியாளர்களை சந்திக்கத் தயாராகும் வீராங்கனை மாலதி தன்னிடம் விலை உயர்ந்த தரமான அதிநவீன துப்பாக்கி இல்லையே என்றதொரு ஏக்கத்திலிருக்கும் நிலையில், தனக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் வழங்கிய துப்பாக்கியை வைத்து தான் தானும், தனது சகோதரியும் பயன்படுத்தி துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருவதாகத் தெரிவித்து, பொருளாதார சூழ்நிலையில் தத்தளித்து வரும் தங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் உதவி செய்து மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் பங்கேற்கும் தனக்கு போட்டியாளர்களை எதிர்கொண்டு சமாளிக்க விலை உயர்ந்த தரமான அதிநவீன துப்பாக்கியை வழங்கினால் மென்மேலும் பலதரப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



