• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சூலூரில் தேங்காய் பறிக்க வந்து திருடிய வியாபாரிகள்..,

BySeenu

Oct 8, 2026

​ கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு வந்த பைகளிலும் தென்னங்காய்களை உரித்துத் திருடிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்த விவசாயி ஆவேசத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
​
சூலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் தேங்காய் பறிப்பற்காக வியாபாரிகள் சிலர் வந்து உள்ளனர். மரங்களில் இருந்து காய்களைப் பறித்து சேகரித்த போது, வியாபாரிகளின் நடவடிக்கைகள் மீது தோப்ப உரிமையாளரான விவசாயிக்குச் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
​உடனடியாக அவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கொண்டு வந்த பைகளைச் சோதனையிட்ட போது விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

தேங்காய்களைத் தோல உரித்து, பைக்கின் சீட்டுக்கு அடியில் உள்ள ‘டூக்கி’ (Scooter Boot Space) பகுதியிலும், சாப்பாட்டுப் பை எனக்கூறி கொண்டு வந்த பைகளுக்குள்ளும் ரகசியமாக மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

கையும் களவுமாகப் பிடித்த விவசாயி, அவர்களைத் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே ஆவேசமாகப் பேசும்போது:

​”தேங்காய் வியாபாரிகளுக்குப் பேர கெடுக்குறீங்கடா! நல்லா இருக்குற வியாபாரிகளோட பேரையும் சேத்து கெடுக்குறீங்க. காய் எடுக்குறதுக்கு பையக் கொண்டு வர்றீங்க… ஏன்யா, இது என்ன சோத்து பையா ? நாங்க எல்லாம் மூஞ்சியப் பார்த்தா லூசு மாதிரி தெரியுதா ?

​பாருங்க மக்களே, அருமையான ஆளுங்க! உங்க பேர நல்லா நிலைநாட்டிடுவாங்க, நீங்களும் நல்லா வியாபாரம் பண்ணிடலாம், ஒரு வண்டியில 32 காய்… இன்னொரு வண்டியில 32 காய்… பையில 16 காய்! மொத்தம் ஒரு ஆளு 48 காயில இருந்து 64 காய் வரைக்கும் திருடி வச்சிருக்கான்” எனத் தோப்பில் பறித்த காய்களைத் திருடர்களின் வண்டியில் இருந்தும் பையில் இருந்தும் வெளியே எடுத்துப் போட்டு வெளுத்து வாங்கினார்.
​
விவசாயி ஒருவர் தனது கஷ்டப்பட்டு விளைவித்த தேங்காய்களைத் திருட வந்தவர்களைத் துணிச்சலாகக் கேள்வி கேட்டு, அதை வீடியோவாக வெளியிட்டு உள்ள சம்பவம் கோவை விவசாயிகள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

​அதேவேளையில், “தோட்டங்களுக்குக் காய் பறிக்க வரும் நபர்களை இனி விவசாயிகள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்” எனக் கூறி, இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் விவசாயிகள் பலரும் காரசாரமான கருத்துகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.