• Tue. Nov 24th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் 148 கஞ்சா சாக்லேட்டுகள், 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!

BySeenu

Oct 8, 2026

​ கோவை, ரத்தினபுரி அருகே கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பெங்களூர் முன்னாள் ஐடி (IT) ஊழியர் உட்பட 3 இளைஞர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 148 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாநகரம், ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரி ரோடு சுடுகாடு பகுதியில் சட்ட விரோதமாகக் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக உதவி ஆய்வாளர் கஜேந்திரனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
​

அதன் பேரில், தலைமை காவலர் சாலமன் மற்றும் முதல் நிலை காவலர் பிரபு ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சந்தேகத்திற்கு இடமான முறையில் கிரே நிற ‘Pleasure’ இருசக்கர வாகனத்தில் (TN 99 AH 6174) வந்த 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
​
அவர்களிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்து இருந்த 1 கிலோ கஞ்சா, 148 கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அபுபக்கர் சித்திக் (25), சர்புதீன் (22), ​முருகன் (21) என்பது தெரியவந்தது.

பிடிபட்ட அபுபக்கர் சித்திக் முன்பு பெங்களூரில் உள்ள முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த போது கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். பின்னர் வேலைக்குச் செல்லாமல் தனது உறவினரான சர்புதீன் மற்றும் நண்பரான முருகனுக்கும் கஞ்சா பழக்கத்தைக் கற்றுக் கொடுத்து உள்ளார்.
​மூவரும் சேர்ந்து கடந்த வாரம் தமிழக – ஆந்திர எல்லையான சித்தூர் பகுதிக்குச் சென்று, பெயர் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து பெருமளவில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்து உள்ளனர். அதனை கூலித் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில இளைஞர்கள் அதிகம் வசிக்கும் சாஸ்திரி ரோடு பகுதியில் ரகசியமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

​இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.