• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவிப்பு..,

BySeenu

Oct 7, 2026

கோவை மாவட்டம், வாளையார் முதல் காந்திபுரம் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நேரத்திற்கு வராமல் சரிவர இயக்கப்படாததைக் கண்டித்து, நவக்கரை அருகே பொதுமக்கள் அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள நவக்கரை பகுதி வழியாக வாளையாரில் இருந்து காந்திபுரத்திற்குத் தினசரி ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப் பேருந்துகளை நம்பி ஆயிரக் கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தினமும் பயணிக்கின்றனர்.

​இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப் வழித் தடத்தில் அரசுப் பேருந்துகள் கால அட்டவணைப்படி இயங்காமல், நீண்ட நேரம் பேருந்துகள் ஏதுமின்றி பொதுமக்கள் காத்துக் கிடக்கும் நிலை நீடித்து வந்து உள்ளது. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நேரத்தில் 3 முதல் 4 பேருந்துகள் மொத்தமாக அணிவகுத்து வந்து செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமலும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் குறித்த நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். பேருந்து சேவை சீரற்ற முறையில் இயங்குவது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள், இன்று காலையில் நவக்கரை பகுதியில் வந்த அரசுப் பேருந்துகளைத் தடுத்து நிறுத்திச் சிறை பிடித்தனர். சாலையில் திரண்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
​
பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதால் கோவை – பாலக்காடு நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

​காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான முறையில் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.