• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Oct 6, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சம்பத்து கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் முன்பு பல நாட்களாக மலை போல் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தானிலிருந்து மதுரை திருமங்கலம் செக்கானூரணி செல்லும் மெயின் ரோட்டில் தச்சம்பத்து பகுதியில் சாலையின் அருகில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது. இங்கு தச்சம்பத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கழிவுகளை சாலை அருகில் பெண்கள் சுகாதார வளாகம் முன்பு கொட்டி விட்டு செல்கின்றனர். பல நாட்களாக குப்பைகள் கொட்டி பல நாட்கள் ஆன நிலையில் தற்போது துர்நாற்றம் வீசி வருவதுடன் சாலையில் செல்பவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே இது குறித்து பலமுறை புகார் அளித்தும் ஓரிரு நாள் குப்பைகளை அப்புறப்படுத்துவதுடன் தினசரி குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளை செய்யாத நிலையில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது தேனூர் ஊராட்சியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பகுதிக்கு குப்பை வண்டிகள் வருவதில் சிரமம் ஏற்படுவதாக இந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகையால் தச்சம்பத்து பகுதியை திருவேடகம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருகிலுள்ள திருவேடகம் ஊராட்சி பணியாளர்கள் தங்களது எல்லைக்குள் இல்லை என கூறி குப்பைகளை அள்ள மறுப்பதாகவும் கூறுகின்றனர். ஆகையால் இரண்டு ஊராட்சிகளுக்கு மத்தியில் உள்ள இந்த பெண்கள் சுகாதார வளாகம் முன்பு தேங்கி கிடக்கும் குப்பைகளை தினசரி அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் பொதுமக்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.