மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மழை வேண்டியும், பொதுமக்கள் நலன் வேண்டியும் இன்று சிறப்பு வருண ஜெபம் நடைபெற்றது.

வருண பகவானை மகிழ்விக்கும் வகையில் ஆரம்பக்கட்ட ஜெபங்கள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து வருண பகவானுக்கான மந்திரங்கள் உச்சரித்து ஜெபம் செய்வதே வருண ஜெபமாகும். இதன் மூலம் வருண பகவான் திருப்தி அடைந்து, மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மழை வேண்டி வருண சூக்தம், பவமான சூக்தம், வருண மந்திரம் மற்றும் பவமான மந்திரம் உள்ளிட்ட மந்திரங்கள் ஓதப்பட்டன. மேலும், அமிர்தவர்ஷினி ராகம் உள்ளிட்ட பாடல்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நீர் பஞ்ச பூதங்களில் முக்கியமான ஒன்றாகவும், மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகவும் உள்ளது. நீர் வளம் பெருகினால் விவசாயம் செழித்து, விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதால் நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த பிரார்த்தனை நடைபெற்றது.

தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஸ்ரீராமன், ஆலோசகர்கள் கிருஷ்ண ஐயர், உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராம கிருஷ்ணன், அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர்.
காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தில் இருந்த போது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின்போது, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் கே. ராஜாராம் மூலம் மகா பெரியவரிடம் மழைக்காக ஆந்திரா சென்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதன்பின்னர் மழை பெய்ததாகவும் நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது.

மழை பெய்து நீர் வளம் பெருகி, விவசாயம் செழித்து, பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த வருண ஜெபம் நடைபெற்றது.
சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் இந்த நிகழ்வை நடத்தினர்.




