• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சுங்கச்சாவடியை அகற்றகோரும் கோவை மக்களவை உறுப்பினர் நடராஜன்

திருப்பூர் தாராபுரம் சாலையில் விதிமீறி அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை சுங்கச் சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார்.


திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி – திருப்பூர் – அவிநாசிபாளையம் நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதுப்பித்து அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்குள் அமைந்துள்ளது.

நான்கு வழிச் சாலைக்கு உரிய அகலம், விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படாமல், ஏற்கெனவே இருக்கும் சாலையையே அப்படியே தேசிய நெடுஞ்சாலையாக உருமாற்றி உள்ளனர். இந்த சாலையில் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து நெடுஞ்சாலை சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் இந்த இடத்தை ஆய்வு செய்து நீர்நிலை குட்டையில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை அளித்ததுடன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட்டார். எனினும் கடந்த மூன்றாண்டு காலமாக அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதே சமயம் வேலம்பட்டி சுங்கச் சாவடியை நடைமுறைக்குக் கொண்டு வர தேவையான முன்னேற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு எதிராக சுங்ச் சாவடி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கி அந்த சுற்று வட்டார விவசாயிகள், பொது மக்கள மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடததினர். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக முறையிட்டதுடன், 6ஆம் தேதி சுங்கச் சாவடி அமைக்கப்படும் இடத்தில் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.


இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் ஆகியோர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் இது குறித்து புதன்கிழமை நேரில் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. சி.மூர்த்தி, ஜி.சம்பத் ஆகியோருடன் கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய துணைப் பொது மேலாளரும், திட்ட இயக்குநருமான சி.பாலாஜி வெங்கடேஸ்வரனை சந்தித்து இப்பிரச்சனை குறித்துப் பேசினார்.


கிராமத்தில் உள்ள நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு இருப்பதுடன், உரிய விதிமுறைகளைப் பின்பற்றியும் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படவில்லை. எனவே வேலம்பட்டி கிராமத்தில் சுங்கச்சாவடி அமைத்து சுங்கம் வசூலிக்கும் ஏற்பாட்டை கைவிட வேண்டும், இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார். நீர்நிலை குட்டை இருப்பது தங்கள் கவனத்துக்கு வரவில்லை என்று திட்ட இயக்குநர் கூறியதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். மேலதிகாரிகளுடன் கலந்து பேசி தகவல் தெரிவிப்பதாக திட்ட இயக்குநர் சி.பாலாஜி வெங்கடேஸ்வரன் பதில் கூறினார்.