கோவையில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் ‘எமர்ஜ் 2026’ வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து தொழில், வர்த்தக வல்லுநர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

வேர்ல்டு மலையாளி கவுன்சில் இந்திய மண்டல வர்த்தகக் குழு சார்பில், இந்திய அளவில் முதல்முறையாக கோவையில் நடைபெற்ற ‘எமர்ஜ் 2026’ தேசிய வர்த்தக மாநாட்டில், இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள், மாறிவரும் உலக பொருளாதார சூழல், தொழில் நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகள், நிலையான வளர்ச்சிக்கான நிதி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொழில் மற்றும் வர்த்தக வல்லுநர்கள் கலந்துரையாடினர்.
இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர், நிறுவனங்களின் தலைவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இடையே புதிய தொடர்புகளை ஏற்படுத்துதல், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல், அனுபவமிக்க தொழிலதிபர்களுக்கும் புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கும் இடையே வழிகாட்டுதல் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடைபெற்றது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்வது, புதிய சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது மற்றும் இந்தியாவின் வளர்ச்சியில் தொழில் துறையின் பங்களிப்பு குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன. மேலும், நிலையான வளர்ச்சிக்கான நிதி மற்றும் நிர்வாகம், பாரம்பரிய தொழில்களின் அடுத்தகட்ட வளர்ச்சி, போட்டி நிறைந்த சூழலில் நிறுவனங்களை புதிய பாதையில் கொண்டு செல்வது, தொழில் நிறுவனங்களை எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.

மாநாட்டில் கல்யாண் சில்க்ஸ் நிறுவனர் பட்டாபிராமன், கேரள உப லோக் ஆயுக்தா நீதிபதி அசோக் மேனன், வாக்காரூ இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் நவுஷாத், எஃப்.ஆர்.ஐ.சி.எல். தலைவர் வழக்கறிஞர் முகுந்தன், ஐ.ஐ.டி.பி–மோனாஷ் ஆராய்ச்சி அகாடமி தலைமை செயல் அதிகாரி உன்னிகிருஷ்ணன், எமரால்டு நிறுவன நிர்வாக இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.




