• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் காரில் தொங்கவிட்டுக் குட்கா கடத்திய இருவர் கையில் கட்டுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

BySeenu

Sep 28, 2026

கோவையில் காவல் துறையினரை காரின் மேற்கூரையில் தொங்கவிட்டுக் குட்கா கடத்தித் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த இருவர், போலீஸாரிடம் சிக்காமல் ஓடிய போது கீழே விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
​
கர்நாடகாவில் இருந்து கோவைக்குச் சொகுசு காரில் சுமார் 300 கிலோ எடையுள்ள ஆபத்தான குட்கா புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பலை கோவில்பாளையம் போலீஸார் சோதனையிட்டனர். அப்போது போலீஸாரைத் தள்ளிவிட்டுத் தப்ப முயன்ற போது, தலைமை காவலர் வேல்முருகன் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துத் தொங்கியபடி 40 கி.மீ பயணம் செய்தார். இறுதியாக அவிநாசி அருகே ஆம்புலன்ஸ் நண்பர்கள் மற்றும் போலீஸாரின் உதவியுடன் அந்தச் சொகுசு கார் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
​
காரை போலிஸார் சுற்றி வளைத்து நிறுத்தியதும், அதில் இருந்த சுரேஷ் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் காரில் இருந்து குதித்துத் தப்பியோட முயன்று உள்ளனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக விரட்டிச் சென்று பிடித்தனர்.

​அவ்வாறு வேகமாகத் தப்பி ஓடிய போது, எதிர்பாராத விதமாகத் தடுக்கி கீழே விழுந்ததில் சுரேஷ்குமாருக்கு இடது கையும், ராஜேஷ்குமாருக்கு வலது கையும் முறிந்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
​
இதனைத் தொடர்ந்து, கை முறிவு ஏற்பட்ட இருவரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் அனுமதித்தனர்.

​முன்னதாக, குட்கா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்த புகைப்படம் வெளியான நிலையில், தற்போது தப்பி ஓடி கீழே விழுந்ததாகக் கூறப்படும் இருவர் கைகளிலும் மாவுக்கட்டு போடப்பட்டுச் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன. இச்சம்பவம் கோவை மற்றும் அவிநாசி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.