• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ரயில் நிலையங்களில் பயணிகள் தவறி விழும் விபத்துகளை தவிர்க்க பள்ளி மாணவர்களின் ‘சபாஷ்’ கண்டுபிடிப்பு..,

ByKalamegam Viswanathan

Sep 25, 2026

ரயில் நிலையங்களில் நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளிகளில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலைமையை தவிர்ப்பதற்காக பள்ளி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய அசத்தலான ‘மாதிரி கண்டுபிடிப்பு’ வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரயில் நிலைய விபத்துக்கள்

என்னதான் ரயில்வே நவீனமயமாக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் ரயில் விபத்துகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வரும்போதும் அங்கிருந்து வெளியே கிளம்பும்போதும் அவசரம் கருதி இறங்குகின்ற அல்லது ஓடி வருகின்ற பயணிகள் அவ்வப்போது விபத்தை சந்திக்கின்ற நிகழ்வுகள் ஏராளம்.

கவலை தரும் புள்ளி விவரங்கள்

கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தர்மபுரி ரயில் நிலையத்தில் ரயில் புறப்பட்டு கொண்டிருந்த போது தந்தையுடன் இறங்க முயன்ற ஏழு வயது சிறுவன் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். அதேபோன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு புறப்பட்டு கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் உள்ள இடைவெளியில் விழும்போது அங்கிருந்த ஆர் பி எப் காவலர் சமயோசிதமாக காப்பாற்றினார். இது போன்ற பல்வேறு சம்பவங்கள் ரயில் நிலையங்களில் நடைபெற்ற வண்ணம் உள்ளன. புது தில்லி ரயில்வே பாதுகாப்பு படையின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் கடந்த 2023 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை ஓடும் ரயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் முயன்ற சம்பவங்களில் 216 பேர் உயிரிழந்துள்ளனர். 93 பேர் காயமடைந்துள்ளனர்.

தவிர்க்கக் கூடிய விபத்துகள்

சில விபத்துக்கள் எதிர்பாராதவை; சில விபத்துக்கள் நம்மால் தவிர்க்க முடிந்தவை. ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மால் தவிர்க்க முடிந்த விபத்துகளில் தான் பயணிகள் பெரும்பாலும் அவசரம் கருதி சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. இதற்காக இந்திய ரயில்வே துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பயணிகள் நினைத்தால் மட்டுமே இதனை தவிர்க்க முடியும் என்பது தான் உண்மை.

ரயில்-நடைபாதை இடைவெளி பாதுகாப்பு தகடு

மதுரை மாநகர் கோரிப்பாளையம் அருகே அமைந்துள்ள சாய்ராம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதற்கு ஒரு சிறப்பான தீர்வை கண்டறிந்துள்ளனர். Railway Platform Safety Guard Plate – RPSGP எனும் திட்டத்தின் வாயிலாக பயணிகள் ரயிலில் இருந்து இறங்கும்போதும் ஏறும்போதும் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்கு மாதிரி பாதுகாப்பு தட்டு ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர். இந்த முறை மூலம் ரயில் நகரும்போது ஏறுவதோ இறங்குவதோ முடியாது என்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு மிக மிக பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைந்துள்ளது என்பதுதான் இந்த பாதுகாப்பு தட்டின் முக்கிய அம்சம்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பு

இப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஏ.அமிர்தராஜ், எஸ்.ஹர்திக் கிருஷ்ணா, பி.ஏ.ராஜகீர்த்திக் மற்றும் கே.கார்த்திக் ஆகியோர் இணைந்து Railway Platform Safety Guard Plate – RPSGP திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். சிறிய ரயில், தேவையான சென்சார்கள், மாதிரி தண்டவாளம் மற்றும் நடைபாதை, சிவப்பு ,மஞ்சள், பச்சை நிறங்களில் ஒளிரும் சிக்னல், அதனை இயக்கும் பேனல், ரயில் பெட்டியின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள Railway Platform Safety Guard Plate – RPSGP. இவை அனைத்தையும் நேர்த்தியாக இயக்கி காட்டுகின்றனர். தண்டவாளத்தின் மீது ஊர்ந்து ரயில் நிலையத்திற்கு உள்ளே ரயில் வரும்போது அதற்குரிய சென்சார் சிவப்பு விளக்கை ஒளிரச் செய்கிறது. பிறகு ரயில் வந்து நின்றவுடன் Railway Platform Safety Guard Plate – RPSGP பாதுகாப்பு தகடு லோகோ பைலட் இருக்கும் இன்ஜின் அறையில் இருந்து இயக்கப்பட்டு நடைபாதை நோக்கி வருகிறது. இவை அனைத்தும் ரயில் நின்ற பிறகு தான் நிகழ்கின்றன. இந்த இடைப்பட்ட நேரத்தில் பயணிகள் யாரும் ஏறவோ இறங்கவோ முடியாது. பாதுகாப்பு தகடு விரிந்தவுடன் ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையில் உள்ள இடைவெளி மறைக்கப்படுகிறது. இப்பொழுது சாதாரணமாக பயணிகள் ஏறவோ இறங்கவோ செய்யலாம். கூடுதலாக தவழும் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் வரும் பொழுது அப்படியே உள்ளே ஏறிச் செல்லும் வகையில் இதனை வடிவமைத்துள்ளனர்.

கண்டுபிடிப்பின் சிறப்பம்சம்

இதுகுறித்து மாணவர் அமிர்தராஜ் கூறுகையில், நாங்கள் தற்போது கண்டறிந்திருப்பது ரயில்-நடைபாதை இடைவெளி பாதுகாப்பு தகடு. கடந்த 2024 திருச்சி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறச் சென்ற பயணி தவறி ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்து அவரது ஒரு கால் உடைந்து விட்டது. இது போன்ற சம்பவங்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நிறைய நடைபெறுகின்றன. இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினோம். எங்கள் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ரயில் நிலையத்திற்குள் உள்ளே ரயில் வரும்போது முதலாவதாக சென்சார் மூலம் சிவப்பு விளக்கு எரியும். இந்நிலையில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். அதற்குப் பிறகு பச்சை விளக்கு எரிந்தவுடன் லோகோ பைலட் அதற்குரிய விசையை அழுத்தினால் ரயில் பெட்டியில் இருந்து பாதுகாப்பு தகடு விரியும். ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையில் உள்ள அந்த இடைவெளியை இந்த பாதுகாப்பு தகடு நிரப்பி விடும். இதன் மூலமாக பயணிகள் இடைப்பட்ட பகுதியில் விழுகின்ற வாய்ப்பு குறைகின்றது. கூடுதல் சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு இது மிகவும் சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது’ என்றார்.

பயணிகளுக்கும் பாதுகாப்பு

மாணவர் ராஜகீர்த்திக் கூறுகையில், ‘நாங்கள் உருவாக்கிய இந்த முறையின் வாயிலாக பயணிகள் ஓடி வந்து ஏறுவதோ அல்லது ஓடும் ரயிலில் இருந்து இறங்குவதோ முடியாது. ஒவ்வொரு பெட்டியில் உள்ள கதவுகளும் மூடப்பட்டு இருப்பதால் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. தற்போது நவீன வந்தே பாரத் ரயில்களில் பெட்டியின் கதவுகள் மட்டும் தான் மூடப்பட்டு இருக்கும் இடைவெளி அப்படியே தான் இருக்கிறது. எங்களது கண்டுபிடிப்பில் ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடைப்பட்ட பகுதியும் மூடப்பட்டு விடுவதால் வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர்’ என்றார்.

ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள்

பள்ளி மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு தொடக்க முயற்சியாக இருந்தாலும் கூட, அவர்களின் சமூக பார்வை மிகப் பாராட்டுக்குரியது. இந்த கண்டுபிடிப்பை இந்திய ரயில்வேக்கு அர்ப்பணிக்க விரும்பும் இவர்கள், அடுத்த சில நாட்களில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சந்தித்து அவரிடமும் விளக்கிக் காட்ட ஆர்வத்துடன் உள்ளனர். பள்ளியின் கண்டுபிடிப்பு வழிகாட்டி ஆசிரியர் அப்துல் ரசாக், ரோபோடிக் பயிற்சியாளர்கள் கவின் பாரதி மற்றும் அனுஜா ஆகியோர் மாணவர்களின் இக்குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டி உதவியுள்ளனர்.

ரயில்வேக்கு அர்ப்பணிக்கிறோம்

இதுகுறித்து அப்துல் ரசாக் கூறுகையில், ஓடும் ரயில்களில் ஏறும்போது இறங்கும்போதோ பயணிகள் அடிபடுவது மாணவர்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்ததால் இது குறித்த கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று என்னிடம் ஆலோசனை கேட்டனர். அதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை நான் அவர்களுக்கு வழங்கினேன். முதலில் என்ன கண்டுபிடிக்க போகிறோம் என்பது குறித்து ஒரு வரைபடம் மேற்கொள்ள அறிவுறுத்தினேன். நடைபாதையில் இருந்து Guard Plate மற்றொன்று ரயிலில் இருந்து Guard Plate என இரண்டு விதமான வரைபடங்களை தயாரித்துக் கொண்டு வந்தனர். இதனை நீண்ட விவாதத்திற்கு பிறகு ரயிலில் இருந்து நீளும் Guard Plateக்கான வரைபடத்தை தேர்வு செய்து, அதனை அடிப்படையாகக் கொண்டு தற்போதுள்ள மாதிரி வடிவமைப்பை மாணவர்கள் உருவாக்கினார்கள். இதன் டெமோவை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் முன்பாக செய்து காண்பிக்க அனுமதி கேட்டு இருக்கிறோம். இந்திய நாடு முழுவதும் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு இது பெரும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்’ என்கிறார்.

படிகள் தேவையில்லை

மேலும் அவர் கூறுகையில், ‘இக்குறிப்பிட்ட பாதுகாப்புத் தட்டு ரயில் பெட்டியின் இரண்டு புறமும் இருக்கும். மக்கள் பெட்டிக்குள் ஏறுகின்ற இடத்தில் மட்டும் அன்றி முழு பெட்டியிலும் இந்தத் தட்டு அமைக்கப்பட்டிருப்பதால் ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையிலான இடைவெளியை இல்லாமல் செய்து விடும். இதன் மூலம் தவறி கூட யாரும் இடைவெளியில் விழுந்து விட வாய்ப்பு ஏற்படாது. அதேபோன்று ரயில் பெட்டிகளில் பயணிகள் ஏறி செல்வதற்கான படிக்கட்டுகள் தேவை இருக்காது. இந்தப் பாதுகாப்பு தட்டின் வாயிலாகவே அவர்கள் உள்ளுக்குள் நுழையலாம்’ என்கிறார்.

குறைந்தபட்ச ஒழுக்கம்

சமூக அக்கறையோடு நிகழ்த்தப்படும் கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விடும். மதுரை சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி குறைந்தபட்சம் ரயில் பயணிகளிடம் நேர ஒழுங்கையும், சரியான திட்டமிடலையும் உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்கின்றனர் வழிகாட்டி ஆசிரியர்கள்.