உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மாணவர் ஒருவர் ராப்பலிங் சாகசத்தில் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலைப்பட்டு பகுதியில் உள்ள 155 அடி உயர பாறை மலையில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு மலையேற்ற சங்கத்தின் பாறை ஏற்ற மாணவரான மாஸ்டர் யுகன் கார்த்திக், செங்குத்தான பாறையின் உச்சியில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் ராப்பலிங் முறையில் வெற்றிகரமாக இறங்கி புதிய உலக சாதனையை படைத்தார்.

உலக ஓசோன் தினமான செப்டம்பர் 16-ஆம் தேதியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சாதனையை, தனது ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பதாக மாஸ்டர் யுகன் கார்த்திக் தெரிவித்தார். இளம் வயதிலேயே சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வரும் அவர், இந்த சாதனையின் மூலம் மாணவர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் சாகச உணர்வை ஊக்குவித்துள்ளார்.

இந்த உலக சாதனை முயற்சிக்கான பயிற்சியை, புகழ்பெற்ற மலையேற்ற பயிற்றுநரும் தமிழ்நாடு மலையேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஆர். திருலோகச்சந்திரன் வழங்கியிருந்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த சாதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

சாதனையை Noble Book of World Records நடுவர் எஸ்.வி. ரமணா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார். மேலும், Trek Tamil Nadu திட்டத் தலைவர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக சாதனை சான்றிதழை மாஸ்டர் யுகன் கார்த்திக்கிடம் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மலைப்பட்டு கிராமத் தலைவர் பத்மநாபன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாணவரின் பெற்றோர்களான கருணாநிதி மற்றும் நான்சி ஆகியோரும் இந்த சாதனைக்கு முழு ஆதரவு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

உலக ஓசோன் தினத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை, இளைஞர்களிடையே சாகச விளையாட்டுகள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.








