கொடைரோடு அருகே, திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களை, நிலக்கோட்டை த.வெ.க., எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் துரிதமாக செயல்பட்டு தனது காரிலே ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உதவிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, திண்டுக்கல் – மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் உள்ள கொளிஞ்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் இன்று மாலை திண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டி நகரப் பேருந்து சென்றது. அப்போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்ற அரசு விரைவு பேருந்து மழையின் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற நகரப் பேருந்து மீது பயங்கரமாக மோதிய விபத்தில், நகரப் பேருந்து, சாலையின் இடது புறம் பள்ளத்தில் தள்ளி விட்டு, வலதுபுறம் உள்ள சென்டர் மீடியனில் விரைவு பேருந்து மோதி நின்றது.

இந்த விபத்தில் முன்னால் சென்ற அரசு நகர பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக சுபநிகழ்ச்சிக்கு சென்ற, நிலக்கோட்டை தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார், காயமானவர்களை சிறிதும் ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் அவர்களை தனது காரில் ஏற்றி, அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக. அழைத்துச் சென்றார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சாலையில் நடந்த விபத்தின் போது அவ்வழியாக சென்ற த.வெ.க. நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அய்யனார் துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடி சிகிச்சை கிடைக்க உதவிய செயல் பொதுமக்கள் மட்டுமின்றி பயணிகளும் வெகுவாக பாராட்டினர்.









