• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா..,

ByKalamegam Viswanathan

Sep 16, 2026

கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழ நாளை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை, மதுரை மாநகராட்சி, காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை என பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சிறப்பு கண்காணிப்பாளர்கள்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளை (செப்.17) மிகக் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளைக் கண்காணிப்பதற்காக கொ.வீரராகவராவ், மதுசூதன் ரெட்டி மற்றும் பழனி ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளை காலை 7.40 மணி முதல் 8.10 மணிவரை திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது.

72 வாகன நிறுத்துமிடங்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரைக்கு வருகை தரும் மக்களின் வசதியைக் கருத்திற் கொண்டு அவர்கள் உள்ளே வருகின்ற பகுதிகளிலேயே 5 தற்காலிக பேருந்து நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டு அங்கிருந்து நகருக்குள் வரும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 72 வாகன நிறுத்துமிடங்களில் சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று மாலையிலிருந்தே மீனாட்சி அம்மன் கோவிலின் ஆவணி வீதிகள், மாசி வீதிகளில் முழுவதுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு அப்பகுதிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக மட்டுமே உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சிறப்பு மருத்துவக் குழுக்கள்

மருத்துவ வசதியைப் பொறுத்தவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எலும்பு முறிவு, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 60 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனிப்பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்து மற்றும் காயம் தொடர்பான சிகிச்சை தேவைப்படும் நபர்களை தீவிர விபத்து அறுவை சிகிச்சைப் பிரிவுக்கும் பிற மருத்துவ அவசரநிலைகளில் பாதிக்கப்படுவோரை விரைவாக அழைத்துச் செல்ல உரிய ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் மேற்புறத்தில் 7 மருத்துவ முகாம்களும், உட்புறத்தில் 6 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சி சார்பாக துணை ஆணையர், உதவி ஆணையாள்ர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் தனி அலுவலர்கள் என 1000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்

108 ஆம்புலன்ஸ் சேவையின் மதுரை மண்டல மேலாளர் பிரசாத் கூறுகையில், ‘ஆம்புலன்ஸ் சேவையைப் பொறுத்தவரை நான்கு கோபுர வாயில்களுக்கு அருகில் 4 வண்டிகள், கோவிலுக்கு 500 மீ சுற்றளவில் 7 வண்டிகள், 1 கி.மீ. சுற்றளவில் 5 வண்டிகள், மதுரை மாவட்டம் முழுவதும் 33 வண்டிகள் என 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் 35 ஓட்டுநர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள், 3 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன்£. கோவிலின் மேற்புறத்திலும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு ஏதேனும் மயக்கம் உள்ளிட்ட அவசர நிலை ஏற்பட்டால் ஸ்ட்ரெச்சர்ஸ் மூலம் கீழே கொண்டு வரும் வகையில் தேவையான ரூட் மேப் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வரை ஆம்புலன்ஸ் மட்டும் செல்லுவதற்கு தனி வழி உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சரியான முறையில் ஒருங்கிணைக்க அனைத்துப் பணியாளர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் நமது பணியாளர்கள் 3 பேர் சிசிடிவி கேமராக்களைப் பார்வையிட்டு தேவையான பணிகளை அங்கிருந்து ஒழுங்குபடுத்த உள்ளனர்’ என்றார்.

7 வண்ண அனுமதிச்சீட்டு

கும்பாபிஷேகத்தைக் காண பழுப்பு, இளஞ்சிவப்பு, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் அனுமதிச்சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நிறத்திற்கும் எந்தெந்த பகுதிகளிலிருந்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர விவிஐபி-களுக்கு தங்க நிற வட்டப் பட்டை (Round Badge) வழங்கப்பட்டுள்ளது. திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நிறைவுற்ற பிறகு பொது தரிசனத்திற்கு காலை 10 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சித்திரை வீதிகளிலும் கோவிலுக்குள்ளும் பக்தர்கள் வரிசையாகச் சென்று தரிசனம் செய்ய ஏதுவாக சவுக்கு கம்புகளைக் கொண்ட தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் உள்ளே மற்றும் வெளியே பாதுகாப்பாகச் செல்லும் வகையில் 7 வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

4 நாட்கள் கட்டணமின்றி தரிசனம்

நகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மின்சாரத்துறையின் சார்பாக 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கும்பாபிஷேகப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோக, பக்தர்களின் போக்குவரத்து வசதியைக் கருத்திற் கொண்டு சுமார் ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகர் முழுவதும் குடமுழுக்கு நிகழ்வுகளைக் காணும் வகையில் 53 இடங்களில் மிகப் பிரம்மாண்டமான எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்கள், பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவிலை சுற்றி உள்ள மிகப் பழமையான கட்டிடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றில் எல்லாம் பொதுமக்கள் ஏறி கும்பாபிஷேகத்தை பார்வையிடக்கூடாது என அறிவுறுத்தி அவ்விடங்களை தடை செய்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் 320 பேர்

சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம், அனுப்பானடி, தேனி, மதுரை பெரியார் பேருந்துநிலையம், மீனாட்சி அம்மன் கோவில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் தற்போது முழுவதுமாக மீனாட்சி அம்மன் சித்திரை வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவிலுக்குள் இரண்டு வாகனங்கள். இதுபோக விளக்குத்தூண், பெரியார் பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன், கார் பார்க்கிங் பகுதி என மொத்தம் 12 தீயணைப்பு வாகனங்களும், அவற்றுடன் தீயணைப்பு வீரர்கள் 320 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாகசாலை பகுதிகளிலும் குறுகிய தெருக்களிலும் ஏற்படும் தீ விபத்துகளுக்கு எளிதில் செல்லும் வகையில் சிறிய ரக தீயணைப்பு வாகனங்கள் (Mini Fire Tenders) தயார் நிலையில் உள்ளன. யாகசாலை அருகில் தேவையான தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் தொட்டி மற்றும் கழிப்பறை வசதிகள்

மதுரை மாநகராட்சி சார்பாக சித்திரை, ஆவணி, மாசி மற்றும் வெளிவீதிகளில் போதுமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள நிரந்தரக் கழிப்பறைகள் 24 புனரமைக்கப்பட்டுள்ளன. 28 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கழிப்பறைகள் ஒவ்வொன்றிலும் 3 முதல் 5 கழிப்பறைகள் இருக்கும். சித்திரை வீதிகளில் 16 குடிநீர் தொட்டிகளும், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 203 சின்டெக்ஸ் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர உதவி எண்கள்

வெயிலை சமாளிப்பதற்காக நடைபாதைகளில் தேங்காய் நார் பாய்கள் விரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் தொடர்ந்து தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேரும் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த தூய்மைப் பணியாளர்கள் 1500 பேருக்கும் மேல் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள், தகவல் மற்றும் அவசர உதவிகளுக்காக 1800-425-6781, 1800-425-6782 ஆகிய கட்டணமில்லா உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த உதவி எண்களைத் தொடர்பு கொண்டு தேவையான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.