மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 1 மற்றும் 2வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் பணிகள் முடிந்த நிலையில் உள்ள நியாய விலைக் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள இரண்டு வார்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அக்ரகாரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள ரேசன் கடைக்கும் 3,வது வார்டு முதலியார் கோட்டை கோட்டைமேடு பகுதியில் உள்ள ரேசன் கடைக்கும் பகுதி பகுதியாக செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர். வயதானவர்கள் பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பேட்டை ஒன்று மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேட்டை அரசு பள்ளி அருகில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 14 லட்சம் மதிப்பில் இந்த பணிகளை திமுகவை சேர்ந்த அப்போதைய வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் பணிகள் முடிந்த நிலையில் நியாய விலை கடையானது தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் திறக்கப்படாத நிலையில் உள்ள நியாயவிலைக்கடையில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் இந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் பணிகள் முடிந்த நிலையில் உள்ள இந்த நியாய விலை கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.








