• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,

ByPrabhu Sekar

Sep 9, 2026

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில், பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரி அருகே போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு பூத் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று போக்குவரத்து காவலர் மதன் மற்றும் மற்றொரு போக்குவரத்து காவலர் பணியில் இருந்துள்ளனர்.

காலை 11 மணி வரை கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் நகருக்குள் செல்லக்கூடாது என்ற நடைமுறையின்படி, ஒரு காவலர் சாலையில் வந்த லாரியை வழிமறித்து சாலையோரமாக நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் அவர் காலை உணவு அருந்துவதற்காக அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பூத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மதன், அந்த லாரியை அங்கிருந்து செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உணவு அருந்திவிட்டு திரும்பி வந்த காவலர், தாம் நிறுத்தி வைத்திருந்த லாரி அனுப்பப்பட்டதற்கான காரணம் குறித்து மதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி அப்பகுதியில் இருந்தவர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும், லாரியை அனுப்பியதில் முறைகேடு நடந்ததாகவும், யாரோ தூண்டுதலின் பேரில் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

பொதுமக்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரே பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.