ஆள் பாதி ஆடை பாதி என்று உடுத்துகின்ற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுத்து புழங்குகின்ற சொலவடைகள் தமிழர்களிடம் எப்போதும் உண்டு. அது போன்ற ஆடை பண்பாட்டு மரபில் பெண்களுக்கு எப்படி சேலையோ அதுபோன்று ஆண்களுக்கு வேட்டி. அதனை உடுத்துகின்ற முறையில் சற்று வேறுபாடு இருந்தாலும் தென்னிந்திய மாநில ஆண்களின் அடையாளமாக வேட்டியே இன்றுவரை திகழ்கிறது. ‘வே’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் வேலி, வேட்டை, வேடன், வேதம், வேட்டி போன்ற தமிழ்ச் சொற்கள் உருவாகின்றன. ‘வே’ என்றால் மறைத்தல், மறைதல் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. உடலை மறைத்து அணிகின்ற ஆடை என்பதாலேயே ‘வேட்டி’ என வழங்கப்படுகிறது. வேட்டி என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுதான் வேஷ்டி என்ற சமஸ்கிருதச் சொல் என்கின்றனர் தமிழ் அறிஞர்கள்.

உடுக்கையும் அறுவை வீதியும்
தமிழர்கள் அணிந்த ஆடை சங்க இலக்கியங்களில் துகில், கலிங்கம், அறுவை, உடை, கச்சு, உடுக்கை, சீரை போன்ற சொற்களால் குறிக்கப்பட்டிருந்தாலும், அவை வேட்டிக்கான நேரடிப் பொருள் கொண்டவை அல்ல. துகில், நுண்துகில், அம்துகில், கலிங்கம், பூங்கலிங்கம், நூலாக்கலிங்கம் போன்ற பல நுண்ணிய ஆடை வகைகள் இருந்ததாக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படுகிறது. இடையில் சுற்றி அணியும் நீளமான துணி என்ற ஆடை மரபு தமிழகத்தில் மிகப் பழமையானது என்பதற்கு தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. ஆடையைக் குறிக்கும் ‘அறுவை’ என்ற சொல்லுடன் கூடிய ‘அறுவை வீதி’ என்ற பெயராலேயே ஒரு வீதி மதுரையில் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. பதிற்றுப்பத்தில் ‘இருநிலந் தோயும் விரிநூல் அறுவை’ என்ற பாடல் வரி, விரிந்த நீண்ட துணியைச் சுட்டுவதாக உரையாசிரியர்கள் கூறுகின்றனர். ஆண்களுக்கான இந்த உடை பெரும்பாலும் வெண்மை நிறத்தில்தான் காணப்படுகின்றன. அதன் ஓரங்களில் கரை, ஜரிகை, வண்ணப்பட்டை போன்ற அலங்காரங்கள் தேவையைப் பொறுத்து மாறுபடுகின்றன. நம் அரசியல்வாதிகள்கூட தங்களது கட்சிக் கொடிகளின் நிறத்திற்கு ஏற்ப கரை வேட்டி அணிகின்றனர் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

வேட்டி – சமூக கௌரவம்
பொதுவாக வேட்டிகள் பருத்தி வேட்டி, பட்டு வேட்டி, ஜரிகைக்கரை வேட்டி, வெள்ளை வேட்டி, வண்ணக் கரைகள் கொண்ட வேட்டி, திருமண வேட்டி, வேட்டி – சட்டை, வேட்டி – அங்கவஸ்திரம் என பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தையல் இல்லாத நீளமான துணியை உடலைச் சுற்றி அணிவது வேட்டியின் அடிப்படைச் சிறப்பு. இதன் காரணமாக கோடை காலம் உள்ளிட்ட எந்தப் பருவ நிலைகளிலும் உடுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. வேட்டி அணிவது சமூக கௌரவத்தின் மற்றொரு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர்கூட கோட்-சூட் அணிந்து சட்டசபைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் வந்தாலும்கூட அவ்வப்போது முக்கியமான நிகழ்வுகளில் வேட்டி-சட்டை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
வீரத்தின் அடையாளம் வேட்டி
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கரு.முருகேசன் கூறுகையில், ‘வேட்டி என்பது வெறும் துணியல்ல நம் பண்பாட்டின் நீளம். வேட்டியை கலிங்கம், அரையாடை, கீழாடை என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துள்ளனர். தொல்காப்பியம், உடையை மனித நாகரிகத்தின் முதல் அடையாளமாகக் குறிப்பிடுகிறது. ‘பட்டும் கலிங்கமும் உடுத்திய பாங்கினர்’ என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பூம்புகார் நகர மக்கள் அணிந்த ஆடையைக் குறிப்பிடுகிறார். ‘உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று திருவள்ளுவர், நட்புக்கு உவமையாக வேட்டி என்ற ஆடை நழுவுவதையே குறிப்பிடுகின்றார். பாரதியும்கூட ‘வேட்டியை மடித்துக் கட்டடா… உன் வீரத்தை உலகுக்கு காட்டடா’ என்று வீரத்தின் குறியீடாக மாற்றிப் பாடுகிறார். தமிழர் மரபில் அணிகின்ற இடத்திற்கு ஏற்ப வேட்டியின் பெயர் மாறுபடுகிறது. கோவிலுக்கு பஞ்சகச்சம், திருமணத்திற்கு பட்டு வேட்டி, உழவுக்கும் போருக்கும் செல்கையில் மடித்துக் கட்டிய வேட்டி, துக்க வீட்டிற்குச் செல்லும்போது வேட்டியின் தலைப்பை இடது பக்கம் விடுதல் என ஒவ்வொரு விதமாக அணியப்படுகிறது’ என்கிறார்.

வேட்டியில் அசத்திய பிரதமர் மோடி
சீனப்பிரதமரோடு தமிழகம் வந்த இந்தியப் பிரதமர் மாமல்லபுரத்தில் வேட்டியோடு நிகழ்வுகளில் பங்கேற்றதை மிகப் பெருமையோடு குறிப்பிட்டார். 1996ஆம் ஆண்டு பாஜக ஆதரவோடு ஐக்கிய முன்னணியின் சார்பாக மத்திய அரசை அமைப்பதில் வேட்டி கட்டிய ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற அடிப்படையில் மூப்பனார் மற்றும் தேவேகௌடா ஆகியோர் பெயர்கள் அடிபட, இறுதியாக தேவேகௌடா பிரதமரானார். அதுவரை பைஜாமா, குர்தா அணிந்தவர்களே பிரதமர் பதவியை அலங்கரித்த நிலையில், தேவேகௌடா முதன் முதலாக வேட்டி அணிந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோன்று தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேட்டி அணிந்து தைப் பொங்கல் திருநாள் நிகழ்வில் தமிழர்களோடு பங்கேற்று தமிழர் மரபு மீதான தனது அன்பை, பற்றுதலை வெளிப்படுத்தினார்.
காந்தியின் அரையாடை
இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலை மகன் மகாத்மா காந்தியடிகளின் அரையாடை விரதம் தமிழர்களின் பண்பாட்டுத் தொட்டில் என்று அழைக்கப்படுகின்ற மதுரையில்தான் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்தது. அதுவரை கோட், சூட்டோடு இருந்த மகாத்மா, மதுரைக்கு ரயிலில் வருகை தந்தபோது, விவசாயிகளின் அரையாடைக் கோலத்தைக் கண்டு மனம் மாறி, பகட்டான தனது ஆடைகளைத் துறந்து வேட்டிக்கு மாறினார். தான் இறக்கும் வரை தனது அரையாடை விரதத்தை காந்தியடிகள் கைவிடவேயில்லை. இறுதியாக அவர் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தபோது அணிந்திருந்த அவரது ஆடையின் ஒரு பகுதியும்கூட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்றைக்கும் சிறப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
8 முழமா 4 முழமா?
விலையில்லா வேட்டி-சேலைதான் தைத்திருநாளை முன்னிட்டு தமிழக அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. வேட்டியும், சேலையும் தமிழர் மரபின் தொடர்ச்சி என்பதால்தான் அந்தப் பண்பாட்டை மறக்காமல் மீறாமல் ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் வழங்கப்படுகிறது. அண்மையில் நமது சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில்கூட கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, வருகின்ற 2027ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைப்பதாகத் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் நான்கில் 3 பங்கு மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதாகவும் அந்தப் பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.
நெசவாளர்கள் நிலை
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்டின், ‘தமிழ்நாடு முழுவதும் தற்போது ரூ.50 கோடி மதிப்பில் 8 முழ வேட்டிகளை நெசவாளர்கள் இருப்பு வைத்துள்ளனர். ஆனால், இப்போது 4 முழ வேட்டி உற்பத்தி என்றால், நெசவாளர்களுக்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு புதிய அரசாணையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். இந்த ஆண்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் 8 முழ வேட்டிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

காலங்கள் மாறினாலும்…
மன்னர்கள் காலத்தில் அரசவைக்கு வருகின்ற புலவர்களின் ஏழ்மை நிலையைக் கருத்திற் கொண்டு அரசன் பல்வேறு பரிசுகளோடு புதிய ஆடைகளை வழங்கி சிறப்புச் செய்தான் என்ற செய்திகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ‘நுண்நூல் கலிங்கம் உடீஇ’ (392) என்றும், ‘பூ துகில் கலிங்கம்’ (398) என்றும் புறநானூறு பாடுகின்றது. புலவரை மகிழ்விக்க அன்றைய அரசர்கள் ஆடை தந்து போற்றினர். பொதுமக்களை மகிழ்விக்க இன்றைய அரசுகள் வேட்டி-சேலை வழங்கி சிறப்புச் செய்கின்றன. காலம் வேறு வேறு என்றாலும், நிகழ்வு என்னவோ ஒன்றாகத்தான் உள்ளது.








