மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையிலும்,விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்கள் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு தப்பி செல்வோரின் வாகனங்களை கண்காணித்து அடையாளம் காணும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன.

ஏற்கனவே நாகமலை புதுக்கோட்டை அருகே காஷ்மீர்- கன்னியாகுமரி 4 வழி சாலை அண்டர் போஸ் பாலத்தின் சர்வீஸ் சாலைகளில் போலீஸ் அவுட்போஸ்ட் உடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து தற்போது நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள பில்லர் சாலை, ராஜம்பாடி, வடபழஞ்சி பிரிவு, செக்கார்ணி அருகே ஊத்துப்பட்டி பிரிவு ஆகிய சாலை சந்திப்புகளில் புதிதாக இரவிலும் வாகனங்களை தெளிவாக கண்காணிக்கும் வகையில் தரம் உயர்ந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது கேமராக்களின் கோணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் தொழில்நுட்ப பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடபழஞ்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பு உள்ள மேம்பாலத்தின் அடியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை எந்த பக்கம் பார்த்து இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஊத்துப்பட்டி பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களையும் செக்கானூரணி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே நான்கு ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்த அவர், காலை,மாலை நேரங்களில் ஏற்படும் வாகன நெர்சலில் களைவது குறித்து போலீசாருக்கு எஸ் பி தேவநாதன் அறிவுரைகள் வழங்கினார்.








