கருப்பு மாஸ்க் அணிந்து வயதான மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு – கல்லூரி மாணவி, மாணவன் கைது – 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகரம், போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில், வயதான மூதாட்டியிடம் கருப்பு நிற முகமூடி அணிந்து பேச்சுக் கொடுத்து சுமார் 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் கல்லூரி மாணவன் ஆகிய இருவரை 24 மணி நேரத்திற்குள் போத்தனூர் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து நகை பறிப்பு சம்பவம் 30.08.2026 அன்று மாலை சுமார் 17.25 மணியளவில், வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சரஸ்வதி என்ற மூதாட்டி தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கருப்பு நிற முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரருகில் வந்து, கிளினிக் எப்போது திறப்பார்கள் என பேச்சுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து மருத்துவரின் வீடு எங்குள்ளது எனக் கேட்டுள்ளார்.

மூதாட்டி மருத்துவரின் வீடு உள்ள திசையை காண்பித்தபோது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதனால் மூதாட்டி கீழே விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் அவர் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
CCTV மூலம் துப்பு துலக்கிய தனிப்படையினர் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும், போத்தனூர் உதவி ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள CCTV கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.
குற்றவாளிகள் சென்ற வழித்தடங்களில் உள்ள CCTV பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்த தனிப்படையினர், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட TVS Jupiter இருசக்கர வாகனத்தின் பதிவு எண் TN 99 AD 4548 என்பதைக் கண்டறிந்தனர்.
மேலும், குற்றவாளிகள் தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக முகமூடி அணிந்திருந்ததும், வாகனத்தின் பதிவு எண்ணை மறைப்பதற்காக கருப்பு நிற டேப்பை பயன்படுத்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
ஆடம்பர வாழ்க்கைக்காக குற்றத் திட்டம் தீட்டியதாக விசாரணையில், கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரும், கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவரும் இணைந்து ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், மாணவனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை குறிவைத்து நகைகளை பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
அதன்படி இருவரும் வெள்ளலூர் பகுதியில் வயதான பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று சரஸ்வதி என்ற மூதாட்டியிடம் மாணவன் கருப்பு நிற முகமூடி அணிந்து சென்று பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தை திசைதிருப்பி, தங்கச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
24 மணி நேரத்தில் இருவரும் கைது
CCTV பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில் முதலில் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கே.ஜி. சாவடி அருகே உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவனை தனிப்படையினர் விரைந்து சென்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும்:
- 2 செல்போன்கள்
- 1 TVS Jupiter இருசக்கர வாகனம்
- முகத்தை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற மாஸ்க்
- வாகனத்தின் பதிவு எண்ணை மறைக்க பயன்படுத்திய கருப்பு நிற டேப்
ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பறிக்கப்பட்ட சுமார் 4 பவுன் தங்கச் செயினை மீட்கவும், இருவருக்கும் வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பதையும் கண்டறிய தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“CCTV இருந்ததால் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முடிந்தது” – துணை ஆணையர் கார்த்திகேயன்
கோவை மாநகர காவல்துறை தெற்கு துணை ஆணையர் திரு. கார்த்திகேயன் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
“போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், குற்றவாளிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, இந்த வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து கைது செய்ய முடிந்தது.

பொதுமக்களும் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தங்களது சொந்த முயற்சியில் அதிக அளவில் CCTV கேமராக்களை நிறுவ வேண்டும். இது குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றம் நடைபெற்றால் குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும், மாணவ–மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கை மற்றும் எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தவறான பாதையில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது. கல்வி மற்றும் நல்ல எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் போத்தனூர் காவல் உதவி ஆணையர் திரு. வசந்த ராஜன், போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அசோக் குமார் மற்றும் தனிப்படை காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
தனது நகையை பறிகொடுத்த சரஸ்வதி மூதாட்டி, குற்றம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் தனிப்படையினர் தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரின் சிறப்பான பணியை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.




