போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில், முகமூடி அணிந்து கொண்டு அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரு கல்லூரி மாணவர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை, வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்த சரஸ்வதி என்பவரிடம், முகமூடி அணிந்த நபர் ஒருவர் “முகவரி” கேட்பது போல் நடித்து, திடீரென அவர் கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த சரஸ்வதி கூச்சலிடவே, அந்த நபர் அங்கு தயாராக நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, போத்தனூர் காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்த CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ‘TVS Jupiter’ இருசக்கர வாகனத்தின் பதிவு எண் TN 99 AD 4548 என்பதைக் காவல்துறையினர் துல்லியமாகக் கண்டறிந்தனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், சிவகுமார் என்பவரது மகனும், தனியார் கல்லூரி மாணவருமான பரணிதரன் (21) என்பவனைக் கைது செய்தனர். அவனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பரணிதரனும், அவனது கல்லூரி தோழரான சிந்து என்பவனும் சேர்ந்து ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை இலக்கு வைத்து இந்த நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனியாகச் சென்று கொண்டிருந்த சரஸ்வதியிடம் “முகவரி” கேட்பது போல பரணிதரன் கவனத்தைத் திசைதிருப்ப, சிந்து என்பவன் மின்னல் வேகத்தில் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியது உறுதி செய்யப்பட்டது.

தற்போது, விடுதியில் தங்கியிருந்த சிந்துவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவரிடமிருந்தும் பறிக்கப்பட்ட சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலி, 2 செல்போன்கள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ள சம்பவம் கோவை மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




