சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குருவின் பெருமைகளைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) கோரிக்கை விடுத்துள்ளது.

ஆன்மிக குரு ஸ்ரீ நாராயண குருவின் 172 ஜெயந்தி விழா, மருந்துவாழ் ஸ்ரீ நாராயண குரு தர்ம மடத்தில் நடந்தது. எய்ம்பா (அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்) சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவி முதலியார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் ராமச்சந்திர குமார் வரவேற்றார்.

முன்னதாக, ஸ்ரீ நாராயண குரு தர்ம மட செயலாளர் அரூபானந்த சுவாமி, ஸ்ரீமத் சிவ சொரூபானந்த சுவாமி, வேள்வி பூஜைகளை துவக்கி வைத்தனர். பின், ஸ்ரீநாராயண குருவிற்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த பக்தர்கள் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வணங்கினர்.
நிகழ்வுக்கு தலைமை வகித்த எய்ம்பா மாநில தலைவர் ஓம்சக்தி இராமச்சந்திரன் பேசியதாவது; “கேரள மாநிலத்தில் பிறந்திருந்தாலும் தமிழர்களுக்கும் உரித்தானவர் ஸ்ரீநாராயண குரு. தேவாரம், திருவாசகத்தில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் நெருக்கமான நண்பராகவும் இருந்தார். இருவரும் தமிழ் மொழி குறித்து செழுமையான விவாதங்களை நடத்தி உள்ளனர். தேசிய கீதம் இயற்றிய, ரவீந்திரநாத் தாகூர், நாராயண குருவை போல வேறு ஒருவரை தன் வாழ்நாளில் கண்டதில்லை என்று புகழாரம் சூட்டிய பெருமைக்கு உரியவர். நாராயண குருவை அவரது ஆசிரமத்தில் தங்கி, சந்தித்தது நான் பெற்ற பேறு என மகாத்மா காந்தியால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

தமிழ்நாடு முழுவதும் நாராயண குருவை அறிந்து கொள்ளும் வகையில், அவரது ஜெயந்தி நாளில் தமிழக அரசு மரியாதை செய்வதோடு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும். அவரது பெருமையை போற்றும் வகையில் அவர் சித்தி அடைந்த மருந்துவாழ் மலையில் மணிமண்டபமும் அமைக்க வேண்டும். அதற்கு உரிய உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம்.” இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் ஜெயந்தி விழா புத்தகம் வெளியிடப்பட்டது. எஸ்.என்.டி.பி., யூனியன் மணிகண்டன், எஸ்.என். ட்ரஸ்ட் நிர்மலன், ஸ்ரீ நாராயண குரு கல்வி மற்றும் பொதுசேவைகள் அறக்கட்டளை தலைவர் சிவசங்கரலிங்கம், தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவன், குரு தர்ம பிரச்சார சபா மாநிலத் தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழக வெற்றிக் கழகம் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கருத்துரை ஆற்றினார். விழா ஒருங்கிணைப்பாளர் மகேஷ் முத்துக்குமார், அமைப்புச் செயலாளர் முருகேசன், செய்தி தொடர்பாளர் மு.ஆதவன் உட்பட மாநில, மண்டல, மாவட்ட, இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அமைப்புச் செயலாளர் நித்திய குமார் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.





