• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நிறுத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்..,

ByK Kaliraj

Aug 28, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த நாகரிகம் குறித்து அறிவதற்காக அகழாய்வு பணிகள் 25 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது. வைப்பாற்றின் கரையோரம் அரசு நிலம் ஏழு ஏக்கர் மற்றும் விஜய கரிசல் குளம் பகுதியில் வசித்து வரும் ஐந்து நபர்களிடம் 18 ஏக்கர் வாங்கப்பட்டு 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

மூன்று கட்டங்களாக ஐந்து ஏக்கர் பரப்பளவு மட்டுமே அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்துள்ளன. முதல் கட்டமாக 16 குழிகள் தோண்டப்பட்டு அதில் 3254 பொருட்களும், இரண்டாம் கட்ட அகழாய்வில் 18 குழிகள் தோண்டப்பட்டு அதில் 4,653 பொருட்களும், மூன்றாம் கட்ட அகழாய்வில் 22 குழிகள் தோண்டப்பட்டு 5003 பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு கட்ட அகழாய்வு பணிக்கு ரூபாய் 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கீழடிக்கு இணையான பொருட்கள் கிடைத்ததால் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. குறிப்பாக கடல் வணிகத்திற்கு பயன்படுத்திய பல்வேறு வடிவிலான அகழாய்வு முத்திரைகள், பல வண்ண நிறத்தில் சங்கு வளையல்கள், சூது பவள மணி, மோதிர கல், செப்பு காசுகள்,விஜய கரிசல் குளம் அகழாய்வில் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருகில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்டது .அதனை விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் பள்ளி, கல்லூரி, மாணவ ,மாணவிகள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் மத்திய அரசு அகழாய்வு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தியதால் மூன்றாம் கட்ட பணிகளுடன் அகழாய்வு நிறுத்தப்பட்டது. அடுத்த கட்டப் பணிகள் ஒரு ஆண்டு ஆகியும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் மக்கள் வாழ்ந்த நாகரீகம் குறித்து முழுமையான வரலாறை தெரிந்து கொள்ள முடியவில்லை. மக்களிடம் வாங்கிய 18 ஏக்கர் நிலத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிகமான பொருட்களும் ,அரிய வகை பொருட்கள் கிடைத்த நிலையில் அகழாய்வு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன .இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.