ஓணம் பண்டிகையைக் முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வாழும் மலையாளி மக்களின் தேவைக்காக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவிற்கு 5 நாட்களில் சுமார் 10 டன் பூக்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
5 நாட்களில் 10 டன் ஏற்றுமதி:

மலையாளிகளின் முதன்மைப் பண்டிகையான ஓணம் திருநாளைக் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்காகக் கோவையின் தொண்டாமுத்தூர், சிறுவாணி சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மல்லிகை, செவ்வந்தி, சாமந்தி, வாடாமல்லி உள்ளிட்ட மலர்களும், ‘ஓண சத்யா’ விருந்திற்கான சமையல் காய்கறிகளும் கோவை சர்வதேச விமான நிலையம் மூலம் ஷார்ஜாவிற்கு ஏர் கார்கோ வசதி வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 5 நாட்களில் மட்டும் 10 டன் அளவிலான பூக்கள் மற்றும் காய்கறிகள் ஷார்ஜாவிற்கு ஏற்றுமதியாகி உள்ளன.
1,600 பயணிகள் பயணம்:
வணிகச் சரக்குகள் மட்டுமன்றி, பண்டிகைக் காலத்தில் உறவினர்களைச் சந்திக்கவும் பண்டிகையைக் கொண்டாடவும் கோவை – ஷார்ஜா இடையே வான்வழிப் பயணமும் கணிசமாக அதிகரித்தது.
கடந்த 5 நாட்களில் ஒவ்வொரு விமானச் சேவையிலும் சராசரியாக 170 புறப்பாடு மற்றும் 150 வருகை என மொத்தம் 1,600 பயணிகள் கோவை மற்றும் ஷார்ஜா இடையே பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
பயணிகள் கைவசம் சென்ற பூக்கள்:

பொதுவாக ஓணம் சமயத்தில் ஏர் கார்கோவில் அதிகளவில் பூக்கள் மட்டுமே புக்கிங் செய்யப்படும். ஆனால், இம்முறை ஓணம் திருநாளையொட்டி பயணிகள் தங்களின் சொந்த உடைமைகளை அதிக அளவில் கொண்டு சென்றதால், வழக்கமான சரக்கு ஏற்றிச் செல்லும் அளவு சற்று குறைக்கப்பட்டது.
இதன் காரணமாகப் பெரும்பாலான பயணிகள் தங்களின் தனிப்பட்ட உடைமைகளுடனேயே கணிசமான அளவு பூக்களை நேரடியாகக் கையோடு எடுத்துச் சென்று உறவினர்களுடன் இணைந்து ஓணப் பூக்கோலமிட்டுக் கொண்டாடியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




