• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழக யாத்ரீகர்கள்: குடும்பத்தினர் கவலை..,

ByPrabhu Sekar

Aug 27, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 யாத்ரீகர்களை தொடர்புகொள்ள முடியாததால், அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 பேர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கைலாஷ் யாத்திரைக்காக புறப்பட்டனர். குரோம்பேட்டை, காஞ்சிபுரம், மதுரை, தேனி, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர்.

யாத்திரையை முடித்துவிட்டு நேபாளம் – சீனா எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் இமிகிரேஷன் நடைமுறைகளை மேற்கொண்டிருந்தபோது, திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளப்பெருக்கில் குடியேற்ற அலுவலக கட்டிடமும் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுவதால், அங்கு இருந்த யாத்ரீகர்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

கடைசியாக ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை, குழுவின் பயண ஒருங்கிணைப்பாளரான சத்யநாராயணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவரை உட்பட 49 பேரையும் தொடர்புகொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த குழுவில் குரோம்பேட்டையைச் சேர்ந்த சத்யநாராயணன், விக்ரமன், மஞ்சுளா, வேளவேந்தன், ராஜலட்சுமி, அமுதா மற்றும் கிஷோர் உள்ளிட்ட ஏழு பேரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கோபால் – சரஸ்வதி தம்பதியரும், அவர்களது நண்பர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.

கோபால் – சரஸ்வதி தம்பதியரின் மகள் பொற்செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடைசியாக செவ்வாய்க்கிழமை மாலை பெற்றோர் தொடர்பு கொண்டு, கெராங் பகுதியில் தங்கி மறுநாள் காத்மாண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தனர். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்ற தகவல் கிடைத்தாலே போதும்,” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இந்தியா, நேபாளம் மற்றும் சீனா தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிட்லபாக்கம் காவல்துறையினரும், தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளும் குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனத்தில் விசாரணை நடத்தி, யாத்திரைக்கு சென்றவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

49 யாத்ரீகர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் குடும்பத்தினரும் உறவினர்களும் காத்திருக்கின்றனர்.