• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Aug 25, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் பகுதியில் இரண்டு நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர் மேல கால் கிராமத்தின் வடக்கு தெரு பகுதியில் குடிநீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் பெண்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனைகள் நடைபெற உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்பிணி தாய்மார்கள் மருத்துவமனைக்கு வரக்கூடிய நிலையில் குடிநீர் நிறுத்தப்பட்டதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மேலக்கால் ஊராட்சி செயலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குடிநீர் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் வந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக குடிநீர் நிறுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்புகின்றனர் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை உடனடியாக பணியாளர்கள் கொண்டு சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.