தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள ஓடை பாலத்தின் அடியிலும் ஓடை பகுதிகளிலும், எவ்வித அரசு அனுமதியும் இன்றி இரவோடு இரவாக மறைமுகமாக பிவிசி பைப்லைன்கள் அமைக்கப்பட்டு ஆற்றுத் தண்ணீர் திருடப்படுவதாக சமூக ஆர்வலர்களும் அப்பகுதி விவசாயிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சின்னமன்னூரிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள ஓடைப் பகுதி மற்றும் அதிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதிகளில், ஆழ்துளை கிணறுகள் (போர்வெல்) அமைத்து, அங்கிருந்து சட்டவிரோதமாக பைப்லைன்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பொதுமக்களோ அல்லது அதிகாரிகளோ கண்டுபிடிக்க முடியாதபடி, பாலத்தின் அடியிலும் ஓடைப்படுகையிலும் பைப்லைன்களை பதித்து, அதன் மேல் இலை தழைகள், செடி கொடிகள் மற்றும் மண்ணை போட்டு நுட்பமாக மூடி மறைத்துள்ளனர்.
இந்த சட்டவிரோத பைப்லைன் அமைப்பின் பின்னணியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீர் விற்பனை மோசடி நடப்பதாக கூறப்படுகிறது. அரசிடம் உரிய அனுமதி பெற்று பைப்லைன் வைத்திருப்பதாக கூறி, நீர் பற்றாக்குறையால் தவிக்கும் பிற விவசாயிகளிடம் ஒரு பைப்லைனுக்கு ₹1 கோடி முதல் ₹1.5 கோடி வரை பேசி விற்பனை செய்து ஏமாற்றி வருவதாக தெரிகிறது. விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கடன் உடன்களை வாங்கி இந்த பைப்லைன்களை வாங்கும் விவசாயிகள், பின்னர் முறைகேடு கண்டுபிடிக்கப்படும்போது பெருமளவில் நஷ்டமடைந்து பெரும் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.
ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன்பு, சின்னமன்னூர் – முத்தலாபுரம் சாலையில் இதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சுமார் 50 முதல் 60 பைப்லைன்களை நீர்வளத்துறை (WRD) அதிகாரிகள் தோண்டி எடுத்து அகற்றினர். ஆனால், தற்போதும் அதே பாணியில் எவ்வித அனுமதியும் இன்றி மீண்டும் பைப்லைன்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த ஓடைகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறும்போதெல்லாம், பைப்லைன்கள் சேதமடைவதை தவிர்க்க லோக்கல் அளவில் அதிகாரிகளுக்கும் சிலருக்கும் மாமூல் மற்றும் லஞ்சம் கொடுத்து, தூர்வாரும் பணியையே செய்யவிடாமல் தடுத்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஓடைகள் தூர்வாரப்படாமல் பாழடைந்து வருகின்றன.

உத்தமபாளையத்தில் பொதுப்பணித்துறையும் நீர்வள ஆதார அமைப்பும் (WRD) ஒரே வளாகத்தில் இயங்கி வரும் நிலையில், இவ்வளவு பெரிய அளவில் பகிரங்கமாக நடைபெறும் ஆற்று நீர் திருட்டு குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றும், மாமூல் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கேரளாவுடன் முல்லைப்பெரியார் அணை பிரச்சனை நீடித்து வரும் சூழலிலும், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து நிலவும் காலகட்டத்திலும், இப்படி சட்டவிரோதமாக இயற்கை ஆதாரமான ஆற்று தண்ணீரை திருடி கோடி கணக்கில் வணிகம் செய்வதை அனுமதிக்க முடியாது.
விவசாயிகள் முறைப்படி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து, நீர்வளத்துறையிடம் தடையில்லா சான்றிதழ் (NOC) மற்றும் அனுமதி பெற்ற பின்னரே பைப்லைன்களை அமைக்க வேண்டும்.
எனவே, தேனி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக நேரடியாக தலையிட்டு, சின்னமன்னூர் ஓடை பாலத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பைப்லைன்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றும், இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மற்றும் நீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




