• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தெருநாய்கள் தொல்லையால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்…

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம், எரசை காளியம்மன் கோவில் தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அங்கன்வாடி மையத்தில் படித்துவிட்டு வீடு திரும்பிய 4 வயது சிறுவன் கவியரசன் மற்றும் 3 வயது சிறுமி தர்ஷினி ஆகிய இருவரை வெறிநாய் ஒன்று கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதில் சிறுவன் கவியரசனுக்கு தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு தோல் வெந்துபோன நிலையை அடைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி தர்ஷினிக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், தீவிர காயமடைந்த சிறுவன் கவியரசன் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாய்களின் அச்சுறுத்தலால் கிராம பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் தொடர்ந்து நிலவுகிறது. உள்ளாட்சி நிர்வாகமும் அதிகாரிகளும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதே இத்தகைய அசம்பாவிதத்திற்கு காரணம் எனப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எரசை பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருக்கும் சிறுவனின் குடும்பத்திற்கு தகுந்த நிவாரண உதவி வழங்கி, இனிவரும் காலங்களில் எந்தவொரு குழந்தையும் இது போன்ற பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் நிரந்தர பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.