கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் கேரளாவின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணத்தை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து உற்சாகமாக கொண்டாடினர்.

விழாவையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டக் களமாக மாறியது. மாணவிகள் பாரம்பரிய கேரள உடையான கசவு சேலை அணிந்தும், மாணவர்கள் பாரம்பரிய வேட்டி உள்ளிட்ட உடைகள் அணிந்தும் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக கேரளாவின் பாரம்பரிய செண்டை மேளம் முழங்க, மாணவ-மாணவிகள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர். மேளத்தின் தாளத்திற்கு ஏற்ப மாணவர்கள் நடனமாடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

மேலும், கேரளாவின் பாரம்பரிய திருவாதிரைக்களி நடனம் மாணவிகளால் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. பாரம்பரிய உடைகளில் வட்டமாக நின்று மாணவிகள் ஒருங்கிணைந்து நடனமாடிய காட்சி விழாவின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
ஓணம் பண்டிகையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. குறிப்பாக, யானை இடம்பெற்ற பாரம்பரிய நிகழ்வும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
பாரம்பரிய கலைகள், இசை, நடனம் மற்றும் வண்ணமயமான உடைகளுடன் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தால் கற்பகம் கல்லூரி வளாகமே திருவிழாக் கோலம் பூண்டது. மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர்.
கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஓணம் கொண்டாட்டம், மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது.




