• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி திருச்சியில் பால் நிறுத்த போராட்டம்..,

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி இன்று முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் இந்த பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் விற்பனை செய்து வந்தனர்.
ஆனால், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்கவில்லை. இதனால் ஆவினுக்கு பால் வழங்குவதற்கு தயக்கம் காட்டும் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்து வருகின்றனர்.

ஆவின் நிறுவனம் சராசரியாக 1 லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்கிறது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் பாலை ரூ.50 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பதற்கே விவசாயிகள் முன்னுரிமை அளிக்கின்றனர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் வலியுறுத்தினர்.

இன்று முதல் போராட்டம்; தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆனால், அரசு உயர்த்திய உயர்வு போதாது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆவின் நிறுவனத்துக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயா்த்த வேண்டும். தமிழகத்தில் கால்நடை தீவனங்கள் விலை கணிசமாக உயர்வு, தீவனத்திற்கான மானியம் நிறுத்தம் போன்ற காரணங்களால், பால் உற்பத்தி செலவினங்கள் அதிகமாகியுள்ளது. இதனால், கூடுதல் விலைக்கு பாலை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதல் விலைக்கு பாலை கொள்முதல் செய்கின்றனர்.
இதனால், தனியாருக்கு பாலை வழங்க விவசாயிகள் முன்வருவதால், ஆவினுக்கு வரும் பாலின் அளவு குறைந்து விட்டது.

குறிப்பாக, நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், தற்போது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இது விரைவில் 25 லட்சமாக குறைய வாய்ப்புள்ளது.
ஆவினுக்கு பால் விநியோகம் நிறுத்தம்; இதனால் ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் வருவாய் இழப்பை ஈடுசெய்ய பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை ஆண்டுதோறும் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப மறுஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், ஆவினுக்கான பால் கொள்முதல் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதும் உறுதி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்கள், ஆவினை காட்டிலும் லிட்டர் ஒன்றுக்கு, 10 – 12 ரூபாய் வரை, பால் வழங்குபவர்களுக்கு கூடுதல் விலை வழங்குகின்றன. இதனால், தனியார் பால் கொள்முதல் விலை உயர்வால் ஈர்க்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக தனியாரை நாடிச் செல்கின்றனர். இத்தகைய செயல்பாடுகளால் தான், ஆவின் பால் கொள்முதல் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது.

எனவே, ஆவின் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசுக்கு நேற்று 23ந் தேதி வரை கெடு விதிக்கின்றோம். அதற்குள் நல்ல முடிவை அறிவிக்கவில்லை என்றால், நாளை ( 24ந் தேதி) முதல் பால் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச்சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கினர். இன்று காலை பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பாலை கொள்முதல் செய்து தரவில்லை.
இதனால் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு சென்ற ஆவின் வேனில் ஆவின் நிறுவனத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

ஆர்ப்பாட்டம்; இதற்கிடையில் தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்டம் கோப்பு அருகே உள்ள அயிலாப்பேட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, தமிழகம் முழுவதும் 13 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் இன்று10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினர்.

திருச்சி மாவட்டத்தில் பொருத்தவரை 350பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இதில் 20 ஆயிரம் பேர் உள்ளனர், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுதுபோராட்டத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வினியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில்தமிழக அரசு நடவடிக்கை எடுத்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும், அதே சமயத்தில் விவசாயிகளும், ஆவின் நிறுவனமும் பாதிக்காத வகையில் இரு தரப்பினரும் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று
தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தெரிவித்தார்.

ஆவின்பால் தட்டுப்பாடு அபாயம்; பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவி நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பணியை நிறுத்திய காரணத்தால் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் பால் சென்னைக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியுள்ளதால் திருச்சியில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.