• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தெருமுனை பிரச்சாரம் மூலம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தவெக நிர்வாகிகள்!

ByKalamegam Viswanathan

Aug 19, 2026

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, போதைப் பொருள் ஒழிப்பு, குப்பையில்லா மதுரை மற்றும் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மதுரை தெப்பக்குளம் சாலை முதல் முனிச்சாலை 42 வது வார்டு வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தவெக தெற்கு தொகுதி எம்.எல்.ஏ கோபிஷன் சார்பில், 42-வது வார்டு வட்டக் கழக துணைச் செயலாளர் டாக்டர்.ரம்யா முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, சட்டமன்ற உறுப்பினருக்கான தலைமை நிர்வாகி அருண் பிரசாத் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி ஏற்பாடுகளை 42 வது வார்டு வட்டச் செயலாளர் விக்னேஷ் குமார் செய்திருந்தார்.

இதில் “போதைப் பொருட்களை ஒழிப்போம்; குப்பையில்லா மதுரையை உருவாக்குவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! போக்குவரத்து சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவோம்” என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் தவெக நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலைஞர்கள் எமதர்மராஜா மற்றும் சித்ரகுப்தன் வேடமணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எமதர்மராஜா மற்றும் சித்ரகுப்தன் வேடத்தில் கலைஞர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. வித்தியாசமான முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, “சாலை விதிகளை மதிப்போம்… உயிர்களை காப்போம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனை நாடகம் நடைபெற்றது. இதில் கலைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் நிலை, அதனால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், குற்றச் செயல்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நாடகத்தின் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், “போதைக்கு அடிமையாகாதீர்; போதைப் பொருளை ஒழிப்போம்; இளைஞர்களை பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு கருத்துகள் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டன. நாடகத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

பேரணியில் பங்கேற்ற காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், பெரியார், அஞ்சலை அம்மாள் போன்ற தோற்றத்தில் உடையணிந்து, அவரைப் போலவே நடந்து சென்றனர். இதனால் பேரணியில் பங்கேற்றவர்களிடையே உற்சாகம் ஏற்பட்டது. அவரை சுற்றி திரண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர்.

குறிப்பாக, தவெக கொள்கை தலைவர்கள் தோற்றத்தை ஒத்திருக்கும் வகையில் அவர் வேடமணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.