• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பழைய பெருங்களத்தூரில் மின் பொருள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல்..,

ByPrabhu Sekar

Aug 9, 2026

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் பிரபு.

இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மிக்ஸி ஒன்றை கொண்டு வந்து, அதனை விற்றுத் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தாங்கள் பொருட்களை விற்பனை செய்வதில்லை, சர்வீஸ் மட்டுமே செய்து வருவதாக பிரபு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்தப் பெண் கண்ணீர் மல்க, சாப்பிடுவதற்குக் கூட பணம் இல்லை எனக் கூறி, முன்பணமாக 500 ரூபாய் கொடுக்குமாறும், மிக்ஸியை விற்றுத் தருமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபு அந்தப் பொருளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டதாக தெரிவிக்கிறார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெண் கடைக்கு வந்து, அயன் பாக்ஸ், வாட்ச், புதிய மொபைல் போன், கத்தரிக்கோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொடுத்து, அவற்றை விற்றுத் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் பிரபு, இதுபோன்ற பொருட்களை தாங்கள் விற்பனை செய்வதில்லை என்றும், காயலான் கடையில் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து கெஞ்சியதால், 200 ரூபாய் கொடுத்துவிட்டு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு மறுநாள் மீண்டும் கடைக்கு வந்த அந்தப் பெண், லேப்டாப் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. கடையில் உரிமையாளர் இல்லாத நேரத்தில், பணியாளரிடம் இந்தப் பொருட்களை விற்றுத் தருமாறு கூறியதாகவும், உரிமையாளரிடம் தான் ஏற்கனவே பேசியதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பணியாளர் பிரபுவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். பொருட்களை பார்த்துவிட்டு முடிவு செய்வதாக பிரபு கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண் பிரபுவுக்கு தொடர்ந்து பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், அவர் தேவாலயத்தில் இருந்ததால் அழைப்பை எடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. பின்னர் அழைப்பை எடுத்தபோது, பொருட்களை உடனடியாக தருமாறு அந்தப் பெண் ஒருமையில் பேசி மிரட்டியதாக பிரபு குற்றம்சாட்டுகிறார்.

இதனால் சந்தேகமடைந்த பிரபு, அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

விசாரணையின்போது, அந்தப் பொருட்கள் அந்தப் பெண்ணுக்கு சொந்தமானவை எனக் கூறி, அவற்றை ஒப்படைக்குமாறு போலீசார் தெரிவித்ததாக பிரபு குற்றம்சாட்டுகிறார்.

மேலும், தான் ஏற்கனவே அந்தப் பெண்ணுக்கு வழங்கியதாக கூறப்படும் 700 ரூபாயை திரும்பப் பெற்ற பின்னரே பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என பிரபு தெரிவித்ததாகவும், ஆனால் பணம் இல்லையெனில் அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை வைத்துக் கொள்ளுமாறு போலீசார் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபு, பொருட்களின் உரிமை குறித்தும் அவை திருட்டுப் பொருட்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலுமே போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பெண் தனது மகளுடன் வந்து, தாங்கள் தவறான தொழில் செய்வதாக கூறியதாக பொய் புகார் அளிப்போம் என மிரட்டியதாகவும் பிரபு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பொருட்கள் உண்மையில் யாருக்குச் சொந்தமானவை? அவற்றின் மூலாதாரம் என்ன? பிரபு வழங்கியதாக கூறப்படும் பணம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பிரபு கோரிக்கை விடுத்துள்ளார்.