• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பாளை எடுப்புத் திருவிழா!

Byமுகமதி

Aug 6, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் எல்லை காவல் தெய்வமாக செரியாக்குளக்கரையில் பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயில் என்று சொன்னாலும் பனைமரத்தடியில் ஒரு சூலாயுதம் மட்டும் உள்ளது. எதிரே சிதறு தேங்காய் உடைக்க ஒரு கல். இதுவே பிடாரி அம்மன் கோயிலுக்கான அடையாளம்.

கல்லணைப் பாசனத்தில் உள்ள இந்தப் பகுதியில் உள்ள வயல்களில் நாற்றுவிட செல்லும் விவசாயிகள் பிடாரி அம்மனிடம் முளைத்த நெல்லை வைத்து வழிபட்ட பிறகே வயலில் நாற்றுவிடுவததை வழக்கமாக வைத்திருந்தனர். காலப்போக்கில் அதுவும் மறைந்து போனது.

இந்தக் கோயிலில் 5 தலைமுறைக்கு முன்னர் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாக்கள் இல்லாமல் நேர்த்திக்கடன் உள்ள கிராம மக்கள் மட்டும் சென்று சூடம் ஏற்றி வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கிராமத்தில் உள்ள மற்ற கிராமக் காவல் தெய்வங்களுக்கு திருவிழா நடத்தி சிறப்பு வழிபாடுகள் செய்வது போல கிராம எல்லை காவல் தெய்வமாக உள்ள பிடாரியம்மனுக்கும் முளைப்பாரி, மது எடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த கிராமத்தில் முடிவெடுக்கப்பட்டது. கிராமத்தின முடிவின்படி முளைப்பாரி, மது எடுப்பு நடத்த வேண்டும் என்ற நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு எந்தந்த இடங்களில் வைத்து வழிபாடுகள் நடத்தி மண்ணடித்திடல் வந்து சேர்வது என்றும் மண்ணடித்திடல் எங்கே இருந்தது என்று வயது முதிர்ந்தவர்களிடம் கேட்டறிந்து அந்த இடங்களை கண்டறிந்து அதன் பிறகு முளைப்பாரி எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய்க் கிழமை கோயில் பொது முளைப்பாரிக்கு விதை தூவப்பட்ட பிறகு புதன் கிழமை செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் அனைவரும் விதை தூவி வீட்டிற்குள் வைத்து முளைப்பாரியை பாதுப்பாக வளர்த்து கும்மியடித்து வந்தனர். இந்த நிலையில 29 ந் தேதி புதன் கிழமை மாலை பூசாரிகள் முன்னால் செல்ல கிராம மக்கள் ஆட்டம் பாட்டம் கும்மியாட்டத்துடன் முளைப்பாரி தூக்கி வந்து மண்ணடித்திடலைச் சுற்றி பிடாரி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று அம்மனை வழிபட்டு அருகில் உள்ள குளத்தில் முளைப்பாரியை விட்டுச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி புதன் கிழமை கிராம மக்கள் ஒன்று கூடி பாளைஎடுப்புத் திருவிழா நடத்தினர். கிராமத்தின் அனைத்துப் பகுதியில் இருந்தும் மக்கள் பானைகளில் நெல் நிரப்பி, தென்னம்பாளைகளை வைத்து அலங்காரம் செய்து தங்கள் வீடுகள், குலதெய்வம் கோயில்களில் கும்மியடித்து புறப்பட்டு கிராமத்தின் மையப்பகுதிக்கு பாளைக் குடங்களுடன் மக்கள் வந்து ஒன்று சேர்ந்து பூசாரிகள், சாமியாடிகள் முன்னால் செல்ல பாளைக் குடங்களுடன் கும்மியாட்டம், சாமியாட்டத்தோடு ஊர்வலமாக மண்ணடித்திடல் சென்று அங்கிருந்து பிடாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு பாளைகளை போட்டுச் சென்றனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பாளை எடுப்புத் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கூடியிருந்தனர்.