• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

அறந்தாங்கி அரசுக் கல்லூரியின் எதிர்காலம் என்ன ஆவது? வேதனைப்படும் மாணவர்கள்..,

Byமுகமதி

Jul 29, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தவிர்த்து அதன் பிறகு மிகவும் அண்மைக் காலமாகத்தான் பிற பகுதிகளில் அரசுக் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன.

அந்த வகையில் அறந்தாங்கி மட்டுமல்லாது கடற்கரைப் பகுதியில் உள்ள மாணவ மாணவியரும் பயன்பெற வேண்டும் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் அவரால் ஏற்பாடு செய்யப் பட்டு அதுவும் அறந்தாங்கி ஆலங்குடி என இரு தொகுதிகளில் உள்ளவர்களும் பயன் பெற வேண்டும் என அழியாநிலை பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரிக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

அது தொடங்குவதற்கும் கட்டடம் கட்டுவதற்கும் கால அவகாசம் தேவைப் பட்டதால் அறந்தாங்கியில் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி என்ற பெயரில் கல்லூரி தொடங்கப் பட்டது.

அது அழியாநிலையில்தான் அமைய வேண்டும் என அப்போதைய சேர்மன் மெய்யநாதனும் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் அமைய வேண்டும் என அப்போதைய அறந்தாங்கி எம்எல்ஏ ராஜநாயகமும் போட்டி போட்டதில் அவர் ஆளும் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த காரணத்தால் ஆவுடையார்கோயிலை அடுத்துள்ள கல்லனேந்தல் பகுதிக்குக் கொண்டு சென்று விட்டார்.

அதற்காக உரிய முறையில் கட்டடங்கள் கட்டப்பட்டு தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கி வந்த கலை அறிவியல் கல்லூரி கல்லனேந்தலுக்கு இடம் பெயர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அந்தக் கல்லூரியானது பேராசிரியர்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சினையில் விரைவில் மூடுவிழா காண இருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறது அறந்தாங்கி பகுதி.

ஏனென்றால் அரசுப் பள்ளியை மூடிவிட்டார்கள் என்றால் அது சாதாரணமாகப் பார்க்கப்படும். ஆனால் அரசுக் கலை அறிவியல் கல்லூரியையே மூடப் போகிறார்கள் என்றால் சாதாரண விசயம் அல்ல.

இது குறித்து அந்தக் கல்லூரியில் பயின்று தற்போது வெளியில் வந்து விட்ட முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில் தனது எதிர் காலத்துக்குப் பாதிப்பு எதுவும் வந்து விடக் கூடாது என்பதால் தனது பெயரோ புகைப்படமோ வந்து விடக் கூடாது என்ற கண்டிசனுடன் நம்மிடம் பேசிய அவர் இங்கு யார் வந்து பார்த்தாலும் தெரியும் சுற்றுச் சுவர் இல்லாத கல்லூரியாக இயங்கி வருகிறது.

சுற்றுச் சுவர் என்பது கால்நடைகள் இந்த வளாகத்திற்குள் வந்து விடக் கூடாது என்பது மட்டுமல்ல, கால்நடையாக எந்த மாணவரும் வெளியில் சாதாரணமாகச் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மாணவர்களுக்குள் கட்டுப்பாடு என்று ஒன்று இருக்குமானால் சுற்றுச் சுவரே தேவையில்லை. ஆனால் இங்கு பணி புரியும் பேராசியர் மாலதி தனது செல்வாக்கைப் பயன் படுத்திக் கொண்டு தனது கைப்பையைக் கூட எடுத்து வர ஆள் நியமித்து விட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கால்நடையாகவே வந்து பேருந்து நிறுத்தத்தில் பட்டப் பகலில் பஸ் ஏறிச் செல்வதை யார்தான் அனுமதிக்க முடியும்.

அவர் நடத்தும் பாடத்தை யார் நடத்துவது?
இங்கு கல்லூரி முதல்வர் பதவி காலியாக இருந்த நிலையில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணி புரிந்து வந்த பேராசிரியர் ஒருவர்; கடந்த ஆண்டு நவம்பரில் பொறுப்பு முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் வந்தது முதல் இங்கு யாராலும் ஓபி அடிக்க முடியவில்லை. மாணவர்கள் கட் அடிக்க முடியாது. மிகவும் கறார் பேர்வழி. காலை எட்டே முக்காலுக்கு வராத பேராசிரியர்கள் கண்டிக்கப் பட்டார்கள்.
காரணம் என்னவென்றால் இங்கு பணிபுரியும் பேராசிரியர்களில் மூன்று பேர்தான் நிரந்தரப் பேராசிரியர்கள் மற்றவர்களில் பிடிஐ மூலம் நியமிக்கப் பட்டவர்கள் 75சதவீதம். கவுரவ விரிவுரையாளர்கள் 20சதவீதம் பேர். இதில் யார் யாரைக் கண்டிப்பது என்பதில் பெரும் பிரச்சினையே இருந்தது. அதை முழுமையாகத் தீர்த்தவர் பேராசியர் சண்முகசுந்தரம்தான்.

அவருக்கு முன்பு முதல்வராக இருந்த பாலமுருகன் கல்லூரிக்கே வராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தவர். அவருக்கு கல்லூரி நிர்வாகமே தெரியாது. ஒரு முறை மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் மாட்டிக் கொண்டார். அதனால்தான் இவர் நியமிக்கப் பட்டார். அவர் பேராசிரியர்களிடமும் மாணவர்களிடமும் காட்டிய கறார்தான் மாணவர்களைச் சரியாகப் படிக்கச் செய்தது. பேராசிரியர்களை ஒழுங்காகப் பாடம் நடத்தத் தூண்டியது. ஆனால் அதற்காக அவர் மீது கோபம் கொண்ட தவறான பேராசிரியர்கள் கொடுத்த பொய்ப்புகாரின் பேரில் அவரும் விசாரணைக்கு அழைக்கப் பட்டதில் அவர் மனம் நொந்துபோய் இருக்கிறார்.

அவருக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ம.துரை என்பவருக்கு கண்பார்வைக குறைபாடு. அவரால் அரசுக் கருணைக்காகப் பணியில் வைத்துக் கொண்டிருக்கலாமே தவிர அவரால் பாடமும் நடத்த முடியாது. நிர்வாகமும் செய்ய இயலாது. அது அரசின் செயல்பாடு என்றால் மாணவர்களை வழி நடத்துவது யார்? எங்களுக்குக் கல்வி போதிப்பது யார்?

ஆனால் பாடமே நடத்தாமல் இருக்கும் பேராசிரியர்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். இங்கு தமிழ்த்துறையில் பணி புரியும் பேராசிரியர் வி.எஸ்.மாலதி என்றுதான் கையெழுத்து போடுவார். அதற்கே அவருக்குச் சட்டத்தில் இடம் கிடையாது. மாணவர்கள் எழுதும் குறிப்புகளில் எம்ஏ, எம்பில், எம்எட், பிஎச்டி என்று நீண்ட பட்டங்களை எழுத வேண்டும் என்று கறார் படுத்துவார். இத்தனைக்கும் அவர் கவுரவ விரிவுரையாளர்தான். அவர்தான் யாருக்கும் சொல்லாமல் கையெழுத்தை மட்டும் போட்டு விட்டு பேருந்தில் ஏறிச் சென்று விடுவார். அவர் நடத்தும் பாடங்களை யார் நடத்துவது? அவர் மீது யார்தான் நடவடிக்கை எடுப்பது?

திமுக, அதிமுகவை விடுங்கள். இப்போதிருக்கும் தவெக அரசாவது அவரைப் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் இந்தக் கல்லூரி வளரும். இல்லையென்றால் விரைவில் மூடுவிழா காணும் என்பதற்கு இந்த ஆண்டு நடைபெற்ற புதிய மாணவர்கள் சேர்க்கையே சாட்சி.

எந்த மாணவர்கள் கல்வியில் உயர வேண்டும் என்று திமுக, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் போட்டி போட்டார்களோ அவர்கள் அனைவரும் கடற்கரைப் பகுதியில் உள்ளவர்கள் வரை காரைக்குடி கல்லூரிக்குச் சென்று விட்டார்கள். இங்கு பொய்ப்புகார்கள் எழுதிக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள் காரைக்குடியில் இருந்து இங்கு மாணவர்களைக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறார்களா? இந்தக் கல்லூரியை மூடிவிட்டால் அவர்களுக்குப் பணி எங்கிருந்து கிடைக்கும்? என்று பொரிந்து தள்ளினார்.
இந்தக் கருத்துகளை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்த மாணவர் வேறு கல்லூரிக்குச் சென்று விட்டார். மற்றவர்களின் எதிர்காலம் என்ன ஆவது? .