• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புகார் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு..,

ByPrabhu Sekar

Jul 21, 2026

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில், முறையான அனுமதியுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு எதிராக சில அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கத்தினர் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுமக்கள், பெருங்களத்தூர் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், சுமார் 60 பேருக்கு மட்டும் அடையாளம் தெரியாத நபர்கள் அளிக்கும் மொட்டை மனுக்களின் அடிப்படையில், வருவாய்த்துறை, காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பெயரில் தொடர்ந்து நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், முதல்வர் தனிப்பிரிவு மூலம் புகார் வந்துள்ளதாகக் கூறி, மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலிருந்தும் விசாரணைக்கான கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும், சில மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடங்களை இடித்து விடுவோம் எனக் கூறி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி அலுவலகம் அருகிலேயே இருந்தும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தொடர்ந்து இதுபோன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்படுவது ஏன் என கேள்வி எழுப்பிய அவர்கள், இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் பல ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், பட்டா நிலங்களில் விதிமுறைகளின்படி தொழில் செய்து வரும் நபர்களையும், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களையும் மட்டுமே குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருப்பதாகவும், அவற்றை விட்டுவிட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்படுவதை மாநகராட்சி ஆணையர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், போலி மனுக்கள் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்கள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீதும் சமமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.