சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
இந்த ஆண்டு 4,712 இளங்கலை மாணவர்கள், 932 முதுநிலை மாணவர்கள் மற்றும் 116 ஆராய்ச்சி மாணவர்கள் என மொத்தம் 5,644 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்வியில் சிறந்து விளங்கிய 55 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

வேலைவாய்ப்பு துறையிலும் சத்யபாமா பல்கலைக்கழகம் தொடர்ந்து சாதனை படைத்துள்ளது. 2025–2026 கல்வியாண்டில் 450-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் வளாகத் தேர்வில் பங்கேற்றன. இதில் 93.12 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதிகபட்ச ஆண்டு ஊதியமாக ரூ.41.20 லட்சமும், குறைந்தபட்ச ஆண்டு ஊதியமாக ரூ.5.73 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,002 மாணவர்கள் வளாகத் தேர்வின் மூலம் பணிநியமன ஆணைகளை பெற்றுள்ளனர்.
விழாவில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், நேர்மையுடன் வாழ வேண்டும், பெற்றோர்களை மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும், லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், வரதட்சணை இல்லாத சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்களும் மாணவர்களும் முக்கிய சக்தி எனக் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கத்தில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கிராமப்புற மாணவிகளும் உயர்கல்வியில் அதிக அளவில் முன்னேற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.




