• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

காரைக்கால் அரசு பள்ளியில் புதிய கழிப்பறை திறப்பு விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 9, 2026

காரைக்கால் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு இராம.அ.ச. பக்கிரிசாமி பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் (MPLADS) மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு புதுச்சேரி அரசு கட்டிடம் மற்றும் சாலைப் பிரிவு பொது பணித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வி. வைத்திலிங்கம் புதிய கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த முறை இப்பள்ளிக்கு வந்தபோது கழிப்பறை வசதி இல்லை என மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கி புதிய கழிப்பறை கட்டிடம் அமைத்து வழங்கியுள்ளோம் என்றார்.

மேலும், தற்போது உள்ள கழிப்பறை வசதி மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லாததால், மேலும் ஒரு புதிய கழிப்பறை கட்டிடத்தையும் அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதேபோல், பள்ளியின் மதில் சுவர் சேதமடைந்துள்ளதால் அதனை புதுப்பிக்க தேவையான நிதியையும் ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களிடம் உரையாற்றிய வைத்திலிங்கம், “படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு போதாது. மாணவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சமமாக பேண வேண்டும். அதற்காக விளையாட்டிலும் அதிக ஈடுபாடு அவசியம்” என்று வலியுறுத்தினார்.

மாணவர்களின் உடற்திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் சிறிய விளையாட்டு கூடம் அமைத்து வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதுடன், பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.