நட்சத்திரா நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாநகர் வைகையாற்று பகுதியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றனர். சித்திரை திருவிழா போன்ற காலகட்டங்களிலும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் அர்லேகர் வைகையாற்றை தூய்மைபடுத்த அனைத்து தரப்பினரும் முன் வரவேண்டும் என வலியுறுத்தியததால் வைகை ஆறு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு விழாவினை முன்னிட்டு இன்று மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் ஆகாயதாமரையை அகற்றுவதும், 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தி தூய்மைப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து அதற்கான அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு காவல்துறை தரப்பில் மாணவிகள் கலந்துகொண்ட பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இதனால் மாணவிகள் இன்று காலையில் காந்தி அருங்காட்சியகத்திலயே காத்திருக்கவைக்கப்பட்டனர்.
இதனிடையே கல்பாலம் அருகே வைகையாற்று பகுதியில் தேங்கியுள்ள ஆகாயதாமரை செடிகளை 4 ஜேசிபி இயந்திரங்கள் லாரிகள் மூலமாக அகற்றும் பணிகளை இன்று காலை 8 மணிக்கு அறக்கட்டளை நிறுவனர் குருசாமி தொடங்கிவைத்தார்.
பின்னர் காந்தி அருங்காட்சியகத்தில் வைகை ஆற்றின் தூய்மையை பாதுகாப்பது தொடர்பாக மாணவிகள் உறுதிமொழி மட்டும் எடுத்துவிட்டு அங்கிருந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டனர்.

ஜூலை எட்டாம் தேதி இதையடுத்து காலை 8 மணி முதல் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணிகள் நடந்துவந்தபோது மதியம் 1 மணியளவில் அங்குவந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகாயதாமரை செடிகளை அகற்றுவதற்கு உரிய அனுமதி இல்லை என கூறி பணியை நிறுத்தினர்.
இதனையறிந்த அறக்கட்டளையின் நிறுவனர் குருசாமி அங்கு நேரடியாக வந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பணியை ஏன் நிறுத்த சொன்னீர்கள் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பணியை செய்கிறேன் என அதிகாரியிடம் கூறிய போது இன்று தூய்மை பணியை செய்வதற்கான அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நீங்களும் செய்யமாட்டறங்க செய்றவங்களயும் விடமாட்றங்க இத்தனை வருசமா செய்ய அனுமதித்த நீங்கள் இன்று தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இதனால் அங்கிருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேகவேகமாக புறப்பட்டு சென்றபோதும் அறக்கட்டளை நிறுவனருடன் வந்த சிலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை விரட்டி விரட்டி வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள் பாதியிலயே ஆகாயதாமரை செடிகளை அகற்றும் பணியை நிறுத்திவிட்டு வெளியேறினர்.

ஆளுநர் வைகையாற்றை தூய்மையாக வைக்க வேண்டும் இல்லையெனில் மக்கள் பவனே இறங்கும் என கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆளுநர் ஆய்வு என அழைத்தால் அதிகாரிகள் சென்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வைகையாற்றை தூய்மை படுத்தும் பணிகளில் ஈடுபடும் அறக்கட்டளையினருக்கு இன்று ஆளுநரின் பெயரை குறிப்பிட்டு நிகழ்ச்சி நடத்தியதால் மாணவிகள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு, ஆணையாளர் பங்கேற்காமல் போனது, தூய்மை பணியை பாதியில் நிறுத்தியது என அடுத்தடுத்து அறக்கட்டளையினருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டிருப்பது வைகையாற்றை தூய்மைபடுத்தும் விவகாரம் அரசியலாக மாற்றுப்பட்டுவிட்டதா? என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய அறக்கட்டளை நிறுவனர் குருசாமி : –
வைகையாற்றை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அரசிடமோ, பொதுமக்களிடமோ எந்தவித பணமும் பெறாமல், எந்தவித விளம்பரமும் இன்றி கடந்த 3 ஆண்டுகளாக வைகையாற்றினை தூய்மைபடுத்திவருகிறோம் ஆனால் இன்று ஏன் திடிரென தடுக்கின்றனர் என தெரியவில்லை அரசும் செய்யவில்லை எங்களையும் செய்ய விடாமல் தடுக்கின்றனர் என்றார். ஆளுநர் வைகையாற்றை தூய்மையாக வைக்கவேண்டும் என கூறியது வரவேற்க தக்கது. நாங்கள் மாணவிகளை வைத்து பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஏன் இவையெல்லாம் நடக்கிறது என தெரியவில்லை என்றார்.





