சென்னையை அடுத்த தாம்பரம் பழைய பெருங்களத்தூர் திருவள்ளுவர் தெருவில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட வன்முறை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில், பள்ளி மற்றும் பேருந்து நிலையம் அருகிலேயே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தினமும் மது அருந்திவிட்டு சாலையில் விழுந்து கிடப்பவர்களால் பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் டாஸ்மாக் கடையில் மது அருந்திய இரு தரப்பினரிடையே திடீரென தகராறு ஏற்பட்டு, அது பயங்கர மோதலாக மாறியது. இதில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில், சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்திகளுடன் திருவள்ளுவர் தெருவுக்குள் விரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

உயிர் தப்பிக்க ஓடியவர்கள் குடியிருப்பு வீடுகளின் மொட்டை மாடிகளில் ஏறி தாவியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பீர்க்கங்கரனை போலீசார், மாடியில் ஏறி தப்ப முயன்ற ஒருவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக அறிவித்த நிலையில், பள்ளி அருகே செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையை ஏன் மூடவில்லை என்று அரசுக்கு எதிராக மக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக தாம்பரம் முடிச்சூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பழைய பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





