• Tue. Apr 30th, 2024

திருப்பூரில் பள்ளி தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

திருப்பூரில் பள்ளி மாணவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய கீதா பள்ளியில் பயிலும் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது.

மாணவிகளின் புகாரையடுத்து திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ரமேஷ் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அவரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் நடந்த நிகழ்வுகளை கூறியுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியை கீதாவை அழைத்து மாணவிகள் முன்னிலையில் ரமேஷ் விசாரணை மேற்கொண்டார்.

மாணவிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்ததையடுத்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். . இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *